தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி தந்த உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
தமிழகம் முழுவதும் 24 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தும், 23 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள அனுமதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 500 போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, பிப்ரவரி 10-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ததுடன், மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல்துறையிடம் விண்ணப்பிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்து, பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விண்ணப்பித்தனர். ஆனால் அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி சில நாட்களுக்கு முன்னர் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீசில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அளித்த விண்ணப்பித்தை ஏற்று, மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்கும்படியும், அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
பின்னர் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழ்நாடு அரசு. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் கடந்த 17-ந் தேதி நடைபெற்றது. அப்போது, வட மாநில தொழிலாளர்கள் குறித்த விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். வழக்கை விசாரிக்க இயலவில்லை. தமிழ்நாடு அரசு தமது வாதத்தை விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம். இந்த வழக்கு மார்ச் 27-ந் தேதி விசாரிக்கப்படும் என கூறியிருந்தனர். இதனையடுத்து இன்று இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பாக முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார்.
இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாட்டில் 50 இடங்களில் எல்லாம் உடனே ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி தர முடியாது. முதல் கட்டமாக 5 இடங்களில்தான் அனுமதி தர முடியும். உளவுத்துறை தாக்கல் செய்த அறிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துவிட்டது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.