குரூப் 4 தேர்வு முடிவுகளில் வைக்கப்பட்டு வரும் குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு 7301 பேரை தேர்வு செய்வதற்கான குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவித்து, கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடத்தியது. கடந்த மார்ச் 24 ஆம் தேதி முடிவுகள் வெளியாகின. இந்நிலையில், குரூப் 4 தேர்வில் தென்காசி ஆகாஷ் பிரெண்ட்ஸ் அகாடெமி பயிற்சி மையத்தில் படித்த 2000 மாணவர்களும், நில அளவர், வரைவாளர்கள் போட்டித்தேர்வில் காரைக்குடியில் உள்ள மையத்தில் பயின்ற 700 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தகவல் வெளிவந்து பரபரப்பானது. இது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தையும் உண்டாக்கியது.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது. ஏற்கெனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது, அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்.
உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.