ராகுலுக்கு ஆதரவாக 29ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் போராட்டம்!

வருகிற 29ம் தேதி ராகுல் காந்திக்கு ஆதரவாக திருமாவளவன் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டது முதல், அவருக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். அந்த வகையில் தான், ‘‘ராகுல் காந்தி அவர்களின் எம்.பி. பதவியைத் தகுதி நீக்கம் செய்தது திட்டமிட்ட பழிவாங்கும் அற்ப அரசியல் நடவடிக்கையே ஆகும். இது இயல்பாக நடந்தேறிய சட்ட நடவடிக்கை என்னும் தோற்றத்தை உருவாக்கும் முயற்சியில் சங்பரிவார்கள் ஈடுபட்டாலும் மக்களிடையே அம்பலப்பட்டு நிற்கிறார்கள். மோடி அரசின் இத்தகைய சனநாயக விரோத – பாசிசப் போக்கைக் கண்டித்து விசிக சார்பில் எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிற வகையில் ஒருங்கிணைக்கப்படும். ஆர்ப்பாட்ட நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்று அவர் அறிவித்தார்.

இந்தநிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று மாலை 5 மணிக்கு இணையவழியே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், தலைமைநிலையச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர், அமைப்புச் செயலாளர்கள், துணைப் பொதுச்செயலாளர்கள், கருத்தியல் பரப்புச் செயலாளர், அரசியல் குழுச் செயலாளர், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் ஒழுங்குநடவடிக்கை குழுச் செயலாளர், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை எனது தலைமையில் இணையவழியே நடைபெற்றது.

மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பின்வரும் தீர்மீனங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி ராகுல் காந்தி எம்.பி பதவிப் பறிப்பைக் கண்டித்து மார்ச்29ம் தேதி சென்னையில் ‘சனநாயகப் பாதுகாப்பு அறப்போர்’ நடத்துவது. எனவும்; அப்போராட்டத்தில் தோழமைக் கட்சிகளின் தலைவர்களைப் பங்கேற்க அழைப்பது எனவும்; தமிழ்நாடு தழுவிய அளவில் கட்சியின் முன்னணிப் பொறுப்பாளர்கள் அனைவரும் இதில் தவறாமல் பங்கேற்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல் ஏப்ரல் – 14ம் தேதி புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளில் மாவட்டத் தலைநகரங்களில் ‘சனநாயகம் காப்போம்- சிறுத்தைகள் அணிவகுப்பு’ எனும் பெயரில் பேரணி நடத்த வேண்டுமெனவும், இறுதியாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை உறுதிமொழியாக ஏற்க வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.