பிரதமர் நரேந்திர மோடி இமேஜை கெடுக்க வேண்டும் என்று செயல்படுபவர்களின் பெயர்களை பிரதமர் மோடி வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் மீது வழக்கு போட வேண்டும் என்றும் கபில்சிபல் வலியுறுத்தி உள்ளார்.
லோக்சபாவில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, பா.ஜ.க, – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை ஜெர்மனி கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் சர்வதேச அளவில் சதி செய்யப்படுவதாக, காங்கிரஸ் மீது பாஜக கடும் கோபத்தில் இருக்கிறது. அதனை வெளிப்படுத்தும் விதமாக பிரதமர் மோடி நேற்று காங்கிரஸ் மீது மறைமுகமாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக “வெளிநாட்டு சக்திகளை காங்கிரஸ் அழைக்கிறது” என்று விமர்சித்தார்.
போபால் – டெல்லி வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “2014 ஆம் ஆண்டிலிருந்து உறுதியுடன், பகிரங்கமாகப் பேசி தங்கள் உறுதியை வெளிப்படுத்திய சிலர் நம் நாட்டில் உள்ளனர். அவர்கள் மோடியின் (என்) இமேஜை கெடுத்துவிட முயற்சிக்கிறார்கள். இதற்காக, பல்வேறு நபர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக சிலர் நாட்டிற்குள் அமர்ந்து கொண்டும், சிலர் வெளியில் அமர்ந்து தங்கள் பணியை செய்து வருகின்றனர். ஆனால் ஒவொரு இந்தியரும் எனது பாதுகாப்புக் கவசமாகிவிட்டார்கள். இதனால் மக்களைக் கோபமடையச் செய்வதற்கு புதிய தந்திரங்களைக் கையாளும்படி அவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
மோடியின் கடுமையான கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரான கபில் சிபல், ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது நாடுகளின் பெயர்களை பிரதமர் மோடி பகிரங்கமாக வெளியிட வேண்டும். இது அரசின் ரகசியமாக இருக்க முடியாது. அவர்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று கபில் சிபல் கூறினார். 2024 பொதுத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் பாஜக வகுப்புவாத வன்முறையை கையில் எடுத்திருப்பதாகவும், மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் சமீபத்திய சம்பவங்கள் வெறும் “டிரெய்லர்” தான் என்றும் கபில் சிபல் குற்றம்சாட்டினார். ராம நவமி பண்டிகையின் போது பல மாநிலங்களில் வன்முறை மற்றும் தீவைப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
கபில் சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில், “2024ஆம் ஆண்டை நெருங்கி வருகிறோம். தேர்தலையொட்டி பாஜக நான்கு திட்டங்களை வைத்துள்ளது. 1) வகுப்புவாத வன்முறை 2) வெறுப்புப் பேச்சு 3) சிறுபான்மையினரை தூண்டிவிடுதல் 4) ED, CBI, தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை குறிவைத்தல் போன்ற 4 திட்டங்களை வைத்திருக்கிறது. வங்காளத்தில் நடந்த தீ வைப்பு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்டுவது போன்றவை வெறும் ட்ரெய்லர் தான் என்று கபில் சிபல் கூறினார்.