அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தி படித்திருக்க வேண்டும்..” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
சென்னையில் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளாரே?” என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அண்ணாமலை பதிலளித்து பேசியதாவது:-
அமித்ஷா கூறிய கருத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தி படித்திருக்க வேண்டும். இந்தியை முழுமையாக புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்க வேண்டும். நான் பத்திரிகை நண்பர்களை குறையாக கூறவில்லை. அமித்ஷாவிடம் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அவர் கொடுத்த பதிலை நீங்கள் கேட்டால் உங்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாநில தலைவராக நான் மேலிட தலைவர்களிடம் எடுத்து கூறுவேன். கூட்டணி குறித்து தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற குழு ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும். தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டும். பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் நான் மாநில தலைவராக இருக்கிறேன். அதனால் அமித்ஷாவின் பதிலை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அந்த வீடியோவை பார்த்தால் தெளிவாக தெரியும்.
நான் அமித்ஷாவிடம் 2 மணிநேரம் தனியாக பேசி வந்துள்ளேன். பல கருத்துகளை தெரிவித்துள்ளேன். அதனை பத்திரிகையாளர்களிடம் பேசுவது சரியாக இருக்காது. தமிழ்நாட்டு தொண்டர்கள், தலைவர்கள் விருப்பம் எப்படி? 2024, 2026 தேர்தல் எப்படி எதிர்கொள்வது?, தமிழ்நாடு அரசியல் மாறி வருவது பற்றியும் பல கருத்துகளை பேசியுள்ளோம். நான் எங்கேயும் அதிமுக எங்களுடன் கூட்டணியில் இல்லை என்ற கருத்தை கூறவில்லை. இன்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் அதிமுக முக்கிய கட்சியாக உள்ளது. எந்த கட்சி மீதும் பாஜகவுக்கு கோபம் இல்லை. மாநில தலைவராக கிளீன் பாலிடிக்ஸ்ஸை முன்நிறுத்தி உள்ளேன். அதனை முன்னெடுப்பேன். இதில் கட்சியின் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம்.
அமித்ஷாவை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் கூட்டணியில் பாஜக உள்ளதா? என்ற கேள்விக்கு ‛இருக்கிறது’ என்று தான் அமித்ஷா கூறினார். ஆனால் அமித்ஷா கூட்டணியை உறுதி செய்துவிட்டதாக செய்தி வெளியிடுகின்றனர். நான் சொல்வதை தான் அமித்ஷாவும் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் உள்ளது. எத்தனை சீட் கொடுப்பார்கள்?, எந்தெந்த சீட் கொடுப்பார்கள்? என்பதை பார்க்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கான கொள்கைகள், எந்தெந்த இடங்கள் வழங்கப்படுகிறது? என்பன போன்ற விஷயங்கள் உள்ளன. இதனால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது இப்போதே முன்னுரையும், முடிவுரையும் எழுதமுடியாது. இருப்பினும் கட்சி மேலிட உத்தரவுக்கு கட்டுப்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.