சென்னை கலாசேத்ராவில் அறக்கட்டளையின் உட்புகார் விசாரணை குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் அஜிதா திடீரென ராஜினாமா செய்துள்ளார். மாணவிகள் கூறிய புகார்கள் பற்றி நிர்வாகம் சரியாக விசாரிக்கவில்லை என பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து அவர் தனது உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில் கலாசேத்ரா அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் கீழ் திருவான்மியூரில் கலாசேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இந்த கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் தான் கலாசேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். உதவி பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கூறினர். மேலும் கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து உதவி பேராசிரியர் ஹரிபத்மனை நேற்று கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நேற்று விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் தான் சென்னை கலாசேத்ராவில் அறக்கட்டளையின் உட்புகார் விசாரணை குழு உறுப்பினராக இருந்த வழக்கறிஞர் அஜிதா திடீரென தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் இந்த அறக்கட்டளையில் 4 ஆண்டுகளாக கலாசேத்ராவில் அறக்கட்டளையின் உட்புகார் விசாரணை குழு உறுப்பினராக இருந்த நிலையில் தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
கலாசேத்ராவில் நடைபெறும் சமீபத்திய நிகழ்வுகள், எழுந்துள்ள பிரச்சனைகளுக்கு நிர்வாகம் தந்த பதிலால் மிகவும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் இந்த பொறுப்பில் நீடிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. மேலும் தற்போதைய சூழலில் மாணவர்களின் அதிருப்தியால் விசாரணை குழு உறப்பினர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். அதோடு மேலும் மாணவிகள் கூறிய புகார்கள் பற்றி நிர்வாகம் சரியாக விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டி அவர் உறுப்பினர் பதவியில் இருந்து விலகி கொள்வதாக அறக்கட்டளையின் இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுபற்றி அஜிதா கூறுகையில், ‛‛நான் உட்புகார் குழுவில் 4வது ஆண்டாக நீடித்தேன். இந்த கமிட்டியின் பதவிக்காலம் என்பது 3 ஆண்டுகள். நான் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருந்தேன். கலாசேத்ரா நிர்வாகம் சாராத ஒருவர் கமிட்டியில் இருக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த கமிட்டியில் நான் உறுப்பினராக பொறுப்பு வகித்து வந்தேன். 4 ஆண்டுகளில் வந்த புகார்களில் முறையாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் எந்த புகாரும் நிலுவையில் இல்லை. மாணவர்கள் போராட்டம் என்பது பாலியல் பிரச்சனை மட்டுமின்றி அங்குள்ள பாகுபாட்டையும் காட்டுகிறது. இந்த போராட்டத்தை ஜனநாயக ரீதியாக அவர்கள் அணுகவில்லை. இதனால் உட்புகார் விசாரணை கமிட்டியில் இருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் எனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார்.