சென்னையில் கோயில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி!

சென்னையில் கோயில் குளத்தில் சாமியை குளிப்பாட்டும் போதும் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நங்கநல்லூர் எம்எம்டிசி காலனியில் உள்ள ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இந்த கோயிலில் திருவிழா நடைபெற்று வந்த நிலையில் 10ம் நாள் காலையான இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, கோயிலிருந்து சாமி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோயிலுக்கு சொந்தமான நீர் நிலையில் புனித நீராடு செய்யப்படும் நிகழ்வுதான் தீர்த்தவாரி என்று அழைக்கப்படுகிறது. அதேபோல நங்கநல்லூர் ஸ்ரீ தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சாமியும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு இன்று காலை அருகில் இருந்த கோயில் குளத்தில் புனித நீராடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சுமார் 25 அர்ச்சகர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர்கள் அனைவரும் நீரில் மூழ்கி எழுந்தனர். ஆனால், அதில் ஒரேயோரு அர்ச்சகர் மட்டும் நீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த சக அர்ச்சகர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அவர்களும் நீரில் தத்தளிக்க தொடங்கினர். இதனையடுத்து சுற்றிருந்த சக அர்ச்சகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றிருந்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வருவதற்குள் நீரில் 5 அர்ச்சகர்களும் முழுவதுமாக மூழ்கியுள்ளனர். பின்னர் தேடுதல் வேட்டையில் இறங்கிய தீயணைப்பு துறையினர் 4 அர்ச்சகர்களையும் சடலமாக மீட்டுள்ளனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் 5வது அர்ச்சகரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்தவர்கள் பானேஷ், யோகேஷ், ராகவன், சூர்யா மற்றும் மற்றொரு ராகவன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (வயது-22), பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22) யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.