மகாவீர் ஜெயந்தியன்று இறைச்சிக்கடைகளை மூடும் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சீமான்.
ஜெயின் சமூகத்தினரால் வழிபடப்படும் மகாவீரரின் பிறந்த நாள் மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படுவது வழக்கம். அதுபோல, அன்றைக்கு மதுபானக்கடைகளும் மூடப்படும். அந்த வகையில், மகாவீர் ஜெயந்தியான நேற்று முன்தினம் தமிழகத்திலும் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதற்கு முந்தைய தினம் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், இறைச்சிக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறிதது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மகாவீரர் போற்றுதலுக்கு உரியவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அதனை காரணமாக வைத்து இறைச்சிக் கடைகளை மூட சொல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. உணவு என்பது ஒவ்வொருவரின் விருப்பவுரிமை. அதில் அரசு தலையிடுவது என்பது பாசிசம் ஆகும். சமணத்தை தழுவும் மார்வாடி மக்களின் உணர்வுக்காகவே இங்கு இறைச்சிக் கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகின்றன. இது கண்டிக்கத்தக்கது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ராஜஸ்தானில் எந்த விடுமுறையும் விடப்படுவதில்லை. அப்படியிருக்கையில், மார்வாடிகள் மகாவீரர் திருநாளை கொண்டாடுகிறார்கள் என்பதற்காக தமிழ்நாட்டில் இறைச்சிக் கடைகளை மூடுவது சரியானது அல்ல.
மார்வாடிகள் மகாவீரர் திருநாளை கொண்டுகிறார்கள் என்பதற்காக தமிழர்கள் இறைச்சி உண்பதற்கு தடை விதிக்கப்படுவது அப்பட்டமான ஜனநாயக துரோகம் ஆகும். திமுக அரசு தன்னை “எல்லோருக்குமான அரசு” எனக் கூறிக்கொள்கிறது. ஆனால், ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களை திருப்திப்படுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இறைச்சிக் கடைகளை மூடும் எதேச்சரிகாரப்போக்கு கண்டனத்துக்குரியது. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.