நான் சிந்தனை நிலை தடுமாறினாலும், மரியாதை நிலை தவறியதில்லை: விஜய் சேதுபதி!

‘விடுதலை பார்ட் 1’ படத்தின் சக்சஸ் மீட்டில் வெற்றிமாறன் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நான் சிந்தனை நிலை தடுமாறினாலும், அவரிடம் மரியாதை நிலை தவறியதில்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் வெற்றிமாறனின் படங்கள் அனைத்தும் சமூக கருத்துகளை தாங்கி வரும். நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இவரது இயக்கத்தில் கடைசியாக ‘அசுரன்’ படம் வெளியானது. பூமணியின் வெக்கை நாவலை தழுவி உருவான இந்தப்படத்தில் தமிழ் சினிமாவின் பேவரைட் காம்போவான தனுஷ், வெற்றிமாறன் இணைந்தனர். இந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘விடுதலை’ படத்தை இயக்க ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரியை கதையின் நாயகனாக கொண்டு ‘விடுதலை’ படத்தை இயக்கியுள்ளார். ஜெயமோகனின் ‘துணைவன்’ நாவலை மையமாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது. எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் வாத்தியாராக முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இந்தப்படத்தின் சக்சஸ் மீட்டில் வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு விஜய் சேதுபதி பேசியதாவது:-

‘விடுதலை’ படத்தின் எந்த ப்ரேம் அல்லது மேக்கிங் வீடியோவை பார்த்தாலும் வெற்றிமாறன் சார் தான் பிரதானமாக தெரிவார். ஒரு களிமண்ணை போல் அவர்கிட்ட போனேன். அவருடைய உணர்வுகளை வைத்து தான் புரிந்து நடிப்பேன். இந்தப்படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்து தான் துவங்கியது.
நல்லவேளை நான் பெண்ணாக பிறக்கவில்லை. அப்படி பிறந்திருந்தால் அவரை நான் உஷார் பண்ணிருப்பேன்னு நினைக்கிறேன். இப்போது கூட அவரைப்பார்த்து பேச முடியவில்லை. கூச்சமாக இருக்கும். எப்பவுமே, ஒருவேளை நான் சரக்கு அடிச்சுட்டு போதையில் பேசும்போது கூட அவரிடம் மரியாதையாக தான் பேசுவேன். நான் சிந்தனை நிலை தடுமாறினாலும், அவரிடம் மரியாதை நிலை தவறியதில்லை. அவர்மேல ரொம்பவே மரியாதை வைச்சுருக்கேன். இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.