தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை ராஜ்பவனில் இந்திய குடிமைப்பணி குரூப்-1 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்த பேசினார். அதாவது, “மாநில அரசு ஒரு சட்டத்தை இயற்றுகிறது எனில் அந்த சட்டம் மாநில அரசின் அதிகாரங்களை தாண்டி செல்கிறதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு ஆளுநருக்கு இருக்கிறது. அப்படியான சட்டங்கள் இயற்றப்படும்போது அச்சட்டங்கள் குறித்து ஆளுநர் மூன்று விதமான முடிவுகளை எடுக்கலாம். ஒன்று அவற்றை திருப்பி அனுப்புவது, இரண்டாவது குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பது, மூன்றாவது அவற்றை கிடப்பில் போடுவது. இவ்வாறு கிடப்பில் போடுவது என்றால் அது நிராகரிக்கப்பட்டது என்றுதான் அர்த்தம். வார்த்தை அலங்காரத்திற்காக நாம் அதனை கிடப்பில் வைத்திருக்கிறோம் என்று கூறுகிறோம்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ஆளுநரின் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் ஆளுநர் கருத்துக்கு கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒரு விசித்திரமான மற்றும் வித்தியாசமான வரையறையை அளித்திருக்கிறார். அதாவது கிடப்பில் போடப்பட்டால் அந்த மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டது/இறந்துவிட்டது என்று கூறியுள்ளார். ஆனால், உண்மையில் எவ்விரத காரணமின்றி ஆளுநர் ஒரு மசோதாவை இப்படி கிடப்பில் போடுவதால் நாடாளுமன்ற ஜனநாயகம் இறந்துவிட்டது என்றுதான் அர்த்தம். ஆளுநர் என்பவர் வெறும் அரசியலமைப்புச் சட்ட அதிகாரி. அவர் குறியீட்டுத் தலைவர். அவரது அதிகாரங்கள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சரியாக சொல்வதெனில் அவருக்கு பல விஷயங்களில் அதிகாரமே கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவின் ஆலோசனையின் பெயரில் ஆளுநர் செயல்பட கடமைப்பட்டுள்ளார். எனவே மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால் அதற்கு அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பாஜகவால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் தங்கள் அதிகாரத்தை மீறி நடந்துக்கொள்வதோடு ஜனநாயகத்தையும் காலில் போட்டு மிதிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.