சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பயணம் செய்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக பயணம் செய்தார்.

குடியரசுத் தலைவர், பாதுகாப்புத்துறை அமைச்சர், பிரதமர் என நாட்டின் முக்கிய பொறுப்புகளை வகிக்கக்கூடியவர்கள் முக்கியமான போர் விமானங்களில் பயணம் செய்வதையும், பயிற்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். யானைகள் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர், தற்போது சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்தார்.

முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு பிறகு குடியரசு தலைவராக சுகோய் 30 எம்.கே.ஐ போர் விமானத்தில் பறக்கக்கூடியவராக திரவுபதி முர்மு அறியப்பட உள்ளார். இதற்கு முன்பாக முன்னாள் குடியரசு தலைவர்கள் ராம்நாத் கோவிந்த், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் உள்ளிட்ட பல குடியரசு தலைவர்களும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

ராணுவ பலத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துக்காட்டவும், முப்படைகளை ஆய்வு செய்யக்கூடிய வகையிலும் குடியரசு தலைவர்கள் இத்தைகைய போர் விமானங்களில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த விமானப்படை பயணம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் முதல் விமானப்படை பயணமாக அமைந்துள்ளது.

இன்று திரெளபதி முர்மு அஸ்ஸாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை நிலையத்துக்கு சென்றார். அங்குள்ள போர் விமானங்களை அவர் பார்த்தார். அதன்பிறகு போர் விமானங்களின் செயல்பாடு, மற்றும் ஒவ்வொரு போர் விமானங்கள் இயங்கும் முறை உள்ளிட்டவற்றை திரெளபதி முர்மு அங்கிருந்த விமானப்படை அதிகாரிகளிடம் ஆர்வமாக கேட்டறிந்தார். அதன்பிறகு திரெளபதி முர்மு விமானப்படை பைலட்டின் யூனிபார்ம், ஹெல்மெட் அணிந்து ‛சுகோய் -30 எம்கேஐ’ எனும் போர் விமானத்தில் பயணம் செய்தார். இந்த விமானம் 2 இருக்கைகளை மட்டுமே கொண்டிருக்கும். இந்நிலையில் தான் ஒரு இருக்கையில் பைலட் இருக்க, இன்னொரு இருக்கையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அமர்ந்து பயணித்தார். போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பயணிப்பது இதுதான் முதல் முறையாகும்.

சுகோய்-30 எம்கேஐ என்பது ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 2 இருக்கைகள் கொண்ட மல்டிரோல் போர் விமானமாகும். தற்போது இந்திய விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உரிமம் பெற்று தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.