அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஏப்ரல் 11ஆம் தேதி நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தது. பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், அகவிலைப் படி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை முன்னெடுத்தனர். தமிழ்நாடு பட்ஜெட்டிலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பிகள் வரவில்லை என்பதால் ஏப்ரல் 11ஆம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர். “அமைச்சர்கள் குழு எங்கள் ஒவ்வொரு கோரிக்கையையும் மிக கவனமாக கேட்டதோடு அதை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு பெற்று தருவதாக உறுதியளித்துள்ளனர். அமைச்ச்சர்களின் உறுதிமொழியை ஏற்று எங்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.