அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை: சரத்பவார்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அதிக அளவில் கடன் பெற்று இருப்பதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க சுப்ரீம்கோர்ட்டு ஒப்புதல் அளித்தது. மேலும் நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றி ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி, கோஷங்களையும் எழுப்பினர். இதனால், தொடர்ந்து அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவையில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவின் குறிப்பிட நிறுவனத்தை குறிவைத்து தாக்குவதாக ஹிண்டன் பர்க் அறிக்கை அமைந்துள்ளதாகவும், தவறு நடந்திருந்தால் விசாரணை நடத்தலாம் எனவும் கூறினார். இது போன்ற பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் நாட்டில் சலசலப்பு ஏற்படுவதாக குறிப்பிட அவர் பொருளாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.