தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான்: பிரதமர் மோடி!

தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான் என்று பிரதமர் மோடி பேசினார்.

சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கு நெடுஞ்சாலை, ரயில்வே தொடர்பான பல்வேறு நலத்திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 2 வழித்தடங்களிலுமான பயணிகள் ரெயில் சேவை, நாகை மாவட்டத்தின் உப்பு ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில் ரூ.294 கோடி மதிப்பிலான திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையேயான 37 கி.மீ. அகல ரெயில்பாதை திட்டம், மதுரை- செட்டிகுளம் இடையே 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் (என்.எச்.785), நத்தம்-துவரங்குறிச்சி இடையேயான (என்.எச்.785) 4 வழிச்சாலை திட்டம் ஆகியவற்றை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திருமங்கலம்-வடுகப்பட்டி இடையே (என்.எச்.744) 4 வழிச் சாலை திட்டத்துக்கும், வடுகப்பட்டி-தெற்கு வெங்கநல்லூர் (என்.எச்.744) இடையேயான 4 வழிச்சாலை திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். ரூ.2 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

“வணக்கம் தமிழ்நாடு” என்று தமிழில் உரையை தொடங்கினார். தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் புத்தாண்டில் தமிழ்நாடு மகளுக்கு பயன் தர உள்ளன. தமிழ் புத்தாண்டு புதிய திட்டங்களின் தொடக்கமாக அமையும். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சி தான். தேசபக்தி, தேசிய உணர்வு ஆகியவற்றின் மையம் தமிழ்நாடு தான். தமிழ்நாடு கலாசார மையமாக மதுரை உள்ளது இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடும் உதவுகிறது.

மக்களின் ஒவ்வொரு ரூபாய் வரிப்பணத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்படுகிறது. குறித்த காலக்கெடுவுக்குள் ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்ற இலக்குடன் உள்ளோம். 2014-ம் ஆண்டு 380-ஆக இருந்த மருத்துவக் கல்லூரி தற்போது 660-ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு வளர்ந்தால் இந்தியா வளரும். தமிழ்நாடு வளரும் போது இந்தியா வளர்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாம் முதல் இடத்தில் உள்ளோம். மலிவு விலையில் மக்களுக்கு இணையதள சேவை வழங்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம் தமிழ்நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும். தற்போது துவக்கி வைக்கப்பட்ட திட்டங்களால் சென்னை, கோவை, மதுரை பயன்பெறும்.

பல சுதந்திரப் போராட்ட தியாகிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஒரு கொண்டாட வேலையில் நான் இங்கு வந்துள்ளேன் என்பது எனக்கு தெரியும். இன்னும் சில நாட்களில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட உள்ளோம். புதிய ஆற்றல், புதிய நம்பிக்கை, புதிய தொடக்கத்திற்கான நேரம் இது.. பல திட்டங்களைத் தொடங்கியுள்ளோம், வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இந்த திட்டங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு உற்சாகத்தைக் கூட்டும். கடந்த சில ஆண்டுகளில் கட்டமைப்பு துறையில் புரட்சியை செய்து வருகிறோம். விமானம், ரயில், சாலை எனப் பல கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். பட்ஜெட்டில் கட்டமைப்பிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2014 ஒதுக்கீட்டை விட 5 மடங்கு அதிகம். ரயில்வே கட்டமைப்பிற்கும் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தொகை ஒதுக்கீடு செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் அதிக நீளத்திற்குத் தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. 2014உடன் ஒப்பிடுகையில் இது இரட்டிப்பாக்கியுள்ளது. 2014க்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் 600 கிமீ ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டது.. இப்போது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4000 கிமீ ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டு வருகிறது. 2014 வரை 74 ஏர்போர்ட்கள் மட்டுமே உருவாக்கி இருந்தார்கள்; அது இப்போது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

2014 உடன் ஒப்பிடுகையில் துறைமுகங்களின் திறனும் கூட இரட்டிப்பாகியுள்ளது. மருத்துவ கல்லூரிகள்: போக்குவரத்து கட்டமைப்பு மட்டுமின்றி, டிஜிட்டல் கட்டமைப்பையும் மேம்படுத்தியுள்ளோம். 2014இல் இந்தியாவில் 380 மருத்துவ கல்லூரிகள் இருந்தன: இன்று 660 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் உலக அளவில் நாம் தான் முதல் இடத்தில் இருக்கிறோம். மிகவும் மலிவான விலையில் இணைய சேவை இந்தியாவில் தான் வழங்கப்படுகிறது. 6 லட்சம் கண்ணாடி இழை நார்கள் போடப்பட்டு, கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது. கலாச்சாரமும் தொலைநோக்கு பார்வையும் தான் இதைச் சாத்தியமாக்கியுள்ளது.

மக்களின் கனவுகளின் நனவாக்கும் திட்டங்களாகவே கட்டமைப்பை நாங்கள் பார்க்கிறோம். இன்று தொடங்கப்பட்ட திட்டங்களும் மக்களின் கனவுகளை நனவாக்கும் திட்டங்கள் தான். சாலையில் வேகமெடுப்பது வாகனம் மட்டுமில்லை. மக்களின் கனவும் தான் வேகமெடுக்கிறது. பொருளாதாரம் நிறையத் தொடங்குகிறது. ஒவ்வொரு கட்டமைப்பு திட்டமும் பல கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறது. ரயில்வே உள்கட்டமைப்பில் இதுவரை இல்லாத பெரும் தொகையாக 6000 கோடிக்கும் அதிகமான நிதியைத் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ளோம். 2014க்கு பிறகு தமிழ்நாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் தூரத்தைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது நெடுஞ்சாலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 1200 கோடியில் இருந்து பல மடங்கு அதிகரித்து 8600 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் பல முக்கிய திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளோம். இங்கே புதிதாக ஜவுளி பூங்காவை அறிவித்துள்ளோம். சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே பாதை கட்டுமானம் முடியும் தறுவாயில் உள்ளது. மாமல்லபுரம் கன்னியாகுமரி கிழக்கு கடற்கரைச் சாலையை மேம்படுத்தி வருகிறோம். இப்படிப் பல திட்டங்கள் நடந்து வருகிறது. இன்று மேலும் சில திட்டங்களைத் தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் உள்ளோம். தமிழ்நாட்டின் மூன்று முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்களுக்கு இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் நேரடியாகப் பயன் பெற உள்ளது.

சென்னை ஏர்போர்ட் புது முனையம் அதிகரிக்கும் பயணிகளைச் சமாளிக்க உதவும். இது தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் அம்சத்தை இது நினைவூட்டுவதாக உள்ளது. ஏற்கனவே சென்னை பெங்களூர் இடையே வந்தே பாரத் இயங்கி வருகிறது. இந்த ரயில் குறித்த படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இப்போது மாநிலத்திற்கு இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பமாகும். தொழில் நகராக இருக்கும் கோவைக்கு இந்த நவீன ரயில் சேவை பெரியளவில் உதவும். இதன் மூலம் பயண நேரம் 6 மணி நேரமாகக் குறைக்கிறது. இது சேலம், ஈரோடு, திருப்பூரிலும் பலன் தருகிறது. தமிழகத்தின் கலாசா ராக நகராக இருப்பது மதுரை. பண்டை நகரங்களில் மதுரையும் ஒன்று. இன்றைய திட்டங்கள் இந்த பண்டை நகரத்தின் நவீன கட்டமைப்புக்கு உதவும். தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி என்ஜின்களில் ஒன்று. இன்றைய திட்டங்கள் தமிழக மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும். இவை வேலை வாய்ப்பை அதிகரித்து தமிழ்நாட்டை வளர்க்கிறது. தமிழ்நாடு வளரும் போது இந்தியாவும் வளர்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.