ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை என்று சீமான் கூறினார்.
ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் சீமான் தலைமையில் வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
கோவைக்கும் சென்னைக்கும் எத்தனையோ ரயில்கள் வந்து செல்கின்றன. இப்போது வந்தே பாரத் என்று நவீனப்படுத்தி ரயிலை விடுவது சாதனையா? முதலில் அவரிடம் ஜிஎஸ்டி-யை நீக்குமாறு சொல்லுங்கள்.. சுங்கக் கட்டணத்தை நிறுத்தச் சொல்லுங்கள்.. எங்களால் ஒரு வீடு கட்டி வாழமுடியவில்லை.. செங்கல், ஜல்லி, சிமெண்ட் விற்கும் விலைக்கு என்னதான் செய்வது.
ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய அரசு நீக்கியே ஆக வேண்டும். பாகுபாடு இல்லாமல் குடிநீர், சுகாதாரம், மருத்துவம் வழங்குவதுதான் அரசாங்கத்தின் கடமை. நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. சுங்க கட்டணங்கள் செலுத்தி பொதுமக்களால் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை கலாஷேத்ராவில் உண்மை எதுவும் இல்லாமல் மாணவர்கள் போராட்டம் நடத்தி இருக்க வாய்ப்பில்லை. கலாஷேத்ரா தொடர்பாக நேர்மையாக, நீதியான விசாரணை நடத்த வேண்டும். கலாஷேத்ரா பிரச்சனையில் குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழருக்காக குரல் கொடுக்கிறோம் நாங்கள். எங்களை நீங்கள் பாசிஸ்ட் என அழைத்தால் ஆம் நாங்கள் பாசிஸ்ட்தான். இதனையே திரும்ப திரும்ப சொல்வோம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் போராடிய மக்களுக்கு வெளிநாட்டு பண உதவி கிடைத்தது என்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது திமிர்த்தனமான பேச்சு. இத்தகைய பேச்சுகளுக்கு சரியான பாடம் கிடைக்கும். இவ்வாறு சீமான் கூறினார்.