பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடிதம்!

மருந்துகள், மருத்துவ உபரணங்கள் அளித்து மனிதாபிமான உதவிகளை செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடிதம் எழுதி உள்ளார்.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் துவங்கி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், உக்ரைனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் எமினே சபரோவா, நான்கு நாள் அரசு முறை பயணமாக புதுடெல்லி வந்தார். அப்போது, நம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நம் பிரதமர் மோடிக்கு அளித்த கடிதத்தை, அமைச்சரிடம் வழங்கினார். பின், இந்தியாவுடன் நெருக்கமான மற்றும் உறுதியான உறவை பேண உக்ரைன் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியா – உக்ரைன் இடையிலான வெளியுறவுத்துறை சந்திப்பு, உக்ரைனின் கீவ் நகரில் விரைவில் நடத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டது. உக்ரைனில் மருத்துவம் படித்த வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாடுகளிலேயே ஒருங்கிணைந்த தகுதித் தேர்வை எழுத உக்ரைன் அரசு அனுமதி அளிக்கும் என, அமைச்சர் சபரோவா தெரிவித்தார்.

நம் பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் எழுதியுள்ள கடிதத்தில், மருந்துகள், மருத்துவ உபரணங்கள் உள்ளிட்ட கூடுதல் மனிதாபிமான உதவிகளை அளிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைனையும் சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் எமின் தபரோவா தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் மோதல் தொடங்கிய பிறகு இந்தியா வந்த முதல் உக்ரைன் அமைச்சர் இவர்தான். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ஜனநாயகம் கலந்துரையாடல் மற்றும் பன்முகத்தன்மை கொண்டவர் மோடி என்று பாராட்டினார்.

ஜி 20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் இந்தியாவில் வரும் செப்டம்பர் மாதம் மாநாடு நடைபெற உள்ளதை எமின் தபரோவா சுட்டிக்காட்டினார். இந்த ஜி 20 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். பேசும் சந்தர்ப்பம் கிடைத்தால் ரஷ்யா உடனான போரில் உக்ரைன் நிலைப்பாடு பற்றி அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிடுவார் என்றும் எமின் தபரோவா தெரிவித்தார். ஏற்கனவே ஐ.நா.பொதுச்சபை உட்பட பல இடங்களில் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியது குறிப்பிடத்தக்கது.