தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதி என்றால் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஆட்சியாளர்கள் மற்றும் திமுகவின் குடும்பத்தினரின் ஊழல் மற்றும் அமைச்சர்கள் யார் யார் எவ்வளவு சொத்து சேர்த்துள்ளனர் என்ற விவரத்தை காட்சி படுத்தி காட்டியுள்ளார். மேலும், முதல்வர் ஸ்டாலின் ஷெல் நிறுவனத்திடம் இருந்து 200 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றுள்ளதாக அண்ணாமலை திடுக் தகவலை வெளியிட்டார். இந்த விவகாரம் தமிழகத்தின் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் மற்றும் சொத்து விவகாரத்துக்கு நாம் தமிழர் கட்சி சீமான் பதில் அளித்துள்ளார். நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நாம் தமிழர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் அண்ணாமலை இன்று வெளியிட்ட திமுகவினரின் சொத்து பட்டியலை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான் கூறியதாவது:-
அண்ணாமலையின் குற்றசாட்டை நான் வரவேற்கிறேன். நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும் திமுகவினர் எவ்வளவு சொத்து வைத்துள்ளார்கள் என்று. இது ஒன்றும் புதிய தகவல் இல்லை. ஆனால், இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்றுதான் கேள்வி. அவர் திமுக சொத்து பட்டியலை வெளியிட்டதற்காக அதிமுகவில் இருப்பவர்கள் ஒன்றும் புனிதர்கள் ஆகிவிட முடியாது. அதிமுகவினரின் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். இரண்டு பக்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஊழல் செய்த கட்சிகளோடு இனி கூட்டணி கிடையாது என்று பாஜக அறிவிக்க வேண்டும். ஊழல் செய்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் நான் அண்ணாமலைக்கு வைக்கும் கோரிக்கை. இந்த பட்டியல் எல்லாம் ஒன்றும் புதியது அல்ல. அதிமுகவில் கூட்டணி வைப்பதனால் அவர்களை பற்றி பேசாமல் இருந்துவிட கூடாது. எனவே, அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதி என்றால் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.