13 மாநில மொழிகளில் சி.ஏ.பி.எப். தேர்வு: மத்திய பாஜக அரசுக்கு ஆளுநர் ரவி நன்றி!

மத்திய ஆயுத காவல் படைகளுக்கான பொதுப் பணி தேர்வு ( சி.ஏ.பி.எப்) இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சி.ஏ.பி.எப். தேர்வுகள் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவின்படி, மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு (சிஏபிஎப் ) காவலர்கள் (பொதுப் பணி) தேர்வை இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்த உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான அமித் ஷாவின் முயற்சியில், உள்ளூர் இளைஞர்கள் சிஏபிஎப்-ல் சேர்வதற்கும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர, வினாத்தாள் பின்வரும் 13 பிராந்திய மொழிகளில் தயாரிக்கப்படும்:

அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி
மணிப்பூரி, கொங்கனி.

லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் தாய்மொழியிலோ அல்லது பிராந்திய மொழியிலோ தேர்வில் கலந்துகொள்ள இந்த முடிவு வழிவகுப்பதுடன், அவர்களின் தேர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும். பல இந்திய மொழிகளில் தேர்வை நடத்துவதற்கு வசதியாக, உள்துறை அமைச்சகம் மற்றும் பணியாளர்கள் தேர்வு ஆணையம் தற்போதுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூடுதலாக கையெழுத்திடும். நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களை ஈர்க்கும் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதன்மைத் தேர்வுகளில் சிஏபிஎப் காவலர்கள் பொதுப்பணி தேர்வும் ஒன்றாகும். இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் 2024 ஜனவரி 01 முதல் தேர்வு நடத்தப்படும்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் அரசுகள் உள்ளூர் இளைஞர்கள் தங்கள் தாய்மொழியில் தேர்வெழுதும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாட்டிற்குச் சேவையாற்றும் வகையிலும், அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையிலும், விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை மற்றும் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் , பிராந்திய மொழிகளைப் பயன்படுத்தவும், அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முழு அர்ப்பணிப்புடன் உள்ளது. மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) காவலர் (பொதுப் பணி -ஜீடி) தேர்வுகளை 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தும் உள்துறை அமைச்சகத்தின் முடிவை ‘முன்மாதிரியானது’ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அலுவலகத்தின் இந்த செய்திக்கு பிரதமர் மோடி கூறுகையில், நமது இளைஞர்களின் விருப்பங்களுக்கு சிறகுகளை வழங்கும் ஒரு முன்மாதிரி முடிவு இது! ஒருவரின் கனவுகளை நிறைவேற்றுவதில் மொழி ஒரு தடையாகக் கருதப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான நமது பல்வேறு முயற்சிகளின் ஒரு பகுதியாகும் இது என்று பிரதமர் மோடி கூறினார்.

மத்திய அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நல்வாய்ப்பாக அமையும்; மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி என தெரிவித்துள்ளார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக ஆளுநர் ரவி தமது டுவிட்டர் பக்கத்தில், மத்திய ஆயுத காவல் படையில் சேர விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இனி தமிழில் அவர்கள் நுழைவுத் தேர்வை எழுதலாம். தமிழக மக்கள் சார்பாக பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.