ஒரே பாலினத்தவர் திருமனம் குறித்து நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு

ஒரே பாலின திருமணத்தின் மூலமாக ஒரு புதிய சமூகம் உருவாகிறது; ஒரு புதிய சமூகம் உருவாக்கப்படுவது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.

ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் ஒரே பாலினத்தவர் திருமணத்தை மத்திய அரசு கடுமையாக எதிர்த்து வாதிட்டு வருகிறது. இவ்வழக்கில் மத்திய அரசின் வாதத்தில், ஒரே பாலினத்தவர் திருமனம் குறித்து நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்க முடியாது; இதனை நீதிமன்றம் விசாரிக்கவும் முடியாது. ஒரு புதிய சமூகம் உருவாக்கப்படுமேயானால் அதனை நாடாளுமன்றமே முடிவு செய்யும். திருமணம் என்பது ஒரு ஆண், பெண் இடையேயான உயிரியல் ரீதியான உறவு. இத்தகைய உறவுகளுக்கு அப்பாலான தன்பாலின அல்லது ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் என்பது புதிய சட்டம் இயற்றுதலாகும். ஒருதரப்பு வாதத்தை மட்டுமே உச்சநீதிமன்றம் கேட்கவும் கூடாது என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

ஆனால் தலைமை நீதிபதி சந்திரசூட், ஒரு ஆண், பெண் அவர்களது பிறப்பு உறுப்பு தொடர்பானது அல்ல இந்த வழக்கு. இத்தகைய வழக்குகளில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நீதிமன்றத்தை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. பொதுவான திருமண சட்டத்தில் இருந்து விலகி சிறப்பு திருமண சட்டத்தில் ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு நிவாரணம் வழங்க முடியுமா? என்பதை நீதிமன்றம் ஆராய்கிறது என்றார்.

ஆனால் மனுதாரர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, என் தரப்பினரின் திருமண உரிமையை மறுப்பது என்பது குடியுரிமையை மறுப்பதாகும். அப்படியானால் இதர குடிமக்களுடன் இணைந்தவராக இல்லாமல் ஒரு குற்றவாளியாக கருதப்படுவார். இது தவறான அணுகுமுறை என்றார். இந்த வழக்கில் நாளை வரை வாதங்கள் தொடர உள்ளது.