மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி (பணி மூப்பு) முறையில் பதவி உயர்வு வழங்குவதை அடுத்த மூன்று மாதத்தில் செய்து முடிக்க வேண்டும் என தமிழக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்படும் ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,‘‘ டி.என்.பி.எஸ்.சியில் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு தகுதியின் அடிப்படையில் தான் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட உத்தரவை நடைமுறைப் படுத்தவில்லை என செந்தூர் என்பவர் உட்பட பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் இருக்கும் மொத்த 54 துறைகளிலும் மதிப்பெண் மற்றும் பணி மூப்பு தகுதியின் அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் இதனை அடுத்த மூன்று மாதத்தில் செய்து முடிக்க வேண்டும். குறிப்பாக இந்த நடவடிக்கைகளை 2003ம் ஆண்டு மார்ச் 10ம் தேதியில் இருந்து செய்திட வேண்டும். இருப்பினும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு என்பது 2003ம் ஆண்டு மார்ச் 10ம் தேதிக்கு முன்னதாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.