தம்பி விஜய் கட்சி தொடங்கினால் என்னை ஆதரிக்கட்டும்: சீமான்

விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழ்நாடு அரசியல் களத்திற்குள் நுழைய தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. ஏற்கனவே, ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றனர். வெளிப்படையாக தனது அரசியல் பிரவேசத்தை அறிவிக்காவிட்டாலும், தனது ரசிகர் மன்றத்தில், தனது பெயரைப் பயன்படுத்தி தேர்தலில் நிற்க பச்சைக்கொடி காட்டினார் விஜய். அண்மையில், ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து மாவட்டந்தோறும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என விஜய் கூறியதன் பெயரில், மக்கள் இயக்க நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகளை தொடங்க உத்தரவிட்டிருக்கிறார் நடிகர் விஜய். ஆன்லைன் மூலமாக இந்த புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் களமிறங்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. விஜய்யின் நடவடிக்கைகளும் அதைக் குறி வைத்தே இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் அரசியல் வருகையை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளார். பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமானிடம் விஜய் அரசியல் திட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அம்பேத்கர் பிறந்தாள் கொண்டாடத்தில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்ட நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தால் நீங்கள் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தார் சீமான்.

சீமான் பேசுகையில், “அரசியல் முயற்சிகளை தொடங்கவே விஜய் முயற்சி செய்கிறார் என்றே நான் நினைக்கிறேன். திமுக, அதிமுகவை வைத்து அரை நூற்றாண்டுகளை இந்த மண் கடந்து விட்டது. விஜய் அரசியலுக்கு வந்தால் இந்த அரசியல் வலிமையாக இருக்கும். நான் யாரையும் ஆதரிப்பது கிடையாது. தம்பி விஜய் கட்சி தொடங்கினால் என்னை ஆதரிக்கட்டும். நான் ஒரு தனித்த பேரியக்கம், எனக்கு ஒரு கனவு இருக்கிறது. நாங்கள் ஆட்சி மாற்றம் ஆள் மாற்றத்தை விரும்பவில்லை. அடிப்படை மாற்றத்தை விரும்புகிறோம். இதை எல்லோரும் சேர்ந்து வேலை செய்ய முடியாது. எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் உடன் இணைந்து பயணிக்கலாம்” எனத் தெரிவித்தார்.