ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் விவகாரத்தில் அனைத்து மாநில அரசுகளும் 10 நாட்களில் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒரே பாலினத்தவர் திருமணத்துக்கு அங்கீகாரம் தர வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் வழக்கு. இந்த பொதுநலன் வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஒரே பாலினத்தவர் திருமண விவகாரத்தில் நாடாளுமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும்; நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கவே கூடாது என்பது மத்திய அரசின் வாதமாக இருந்து வருகிறது. அதாவது ஒரே பாலினத்தவர் திருமணம் செய்கிற போது ஒரு புதிய சமூகம் உருவாகிறது; இப்படியான ஒரு புதிய சமூகம் உருவாக்கப்படுதல் குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சபையாகிய நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால் ஒருவரது திருமண உரிமையை மறுப்பது என்பது அவரது குடியுரிமையை மறுப்பதாகும்; ஆகையால் தன்பாலின அல்லது ஒரே பாலினத்தவர் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம்.
இன்றும் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு சார்பாக புதியதாக ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அனைத்து மாநில அரசுகளையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. இதனையடுத்து அனைத்து மாநில அரசுகளும் 10 நாட்களில் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.