ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் மற்றொரு தயாரிப்பாளருக்கு தான் தெரியும்: உதயநிதி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் மற்றொரு தயாரிப்பாளருக்கு தான் தெரியும் என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், வினியோகஸ்தராகவும் திகழ்ந்தவர் உதயநிதி ஸ்டாலின். தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் வாயிலாக ஏராளமான படங்களை வெளியிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அமைச்சராக பதவி ஏற்ற பின்பு சினிமாவை விட்டு முழுவதுமாக விலகினார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் பேச்சு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக ‘கண்ணை நம்பாதே’ படம் வெளியானது. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய மு. மாறன் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். உதயநிதியுடன் ஆத்மிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, வசுந்தரா உள்ளிட்டோர் நடிப்பில் த்ரில்லர் ஜானரில் ‘கண்ணை நம்பாதே’ படம் வெளியானது.

இந்நிலையில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு துறையின் தக்ஷின் மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், உதயநிதி ஸ்டாலின், ரிஷப் ஷெட்டி, கார்த்தி, மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இவ்விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சினிமா துறையிலிருந்து விலகியிருக்கிறேன். கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரை திரையுலகில் பயணித்துள்ளேன். 15 வருடமாக ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இயங்கி கொண்டிருக்கிறது. 15 படங்களில் தயாரித்துள்ளேன். இதுத்தவிர நல்ல படங்களை வெளியிடவும் செய்துள்ளேன்.

இப்போது கூட ஒருவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாய் என கூறியிருக்கிறார். இங்கிருக்கு தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் உண்மை என்னவென்று தெரியும். அதுப்பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் மற்றொரு தயாரிப்பாளருக்கு தான் தெரியும். போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டு செல்கிறார்கள். இவ்வாறு பேசியுள்ளார் உதயநிதி.