ஆளுநர்கள் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மம்தா பானர்ஜி நேற்று தொடர்பு கொண்டார்.
பாஜக நேரடியாகவோ அல்லது கூட்டணியிலோ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு என்பது பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. எதிர்கட்சி தலைவர்கள் ஆளும் மாநிலங்களில், அரசு தரப்பில் கொண்டு வரும் முக்கியமான கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவிற்கும், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தம் தான். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்பதில்லை. அதேபோல் டெல்லி முதலவருக்கும் ஆளுநருக்கும் இடையே பல மாதங்களாக சண்டை நடந்து வருகிறது. மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கேரளா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், நியமிக்கப்பட்ட அதிகாரியான ஆளுநருக்கும் இடையே பஞ்சாயத்து நடந்து வருகிறது.
நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை ஆளுநர் ரவி நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டு வந்தார். அதேபோல் 2 முறை அனுப்பிய ஆன்லைன் ரம்மி மசோதாவை திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதோடு மட்டுமில்லாமல், கிடப்பில் போடப்பட்டால் அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என ஆளுநர் பேசியது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், தமிழக சட்டப்பேரவையின் மாண்பையும் சிதைப்பதாகவே இது பார்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டசபையில் ஆளுநர் பற்றி விவாதிக்க கூடாது என இருந்த விதியை தளர்த்த முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதன் மூலம் ஆளுநர் பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கலாம் என்ற நிலை கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பில் ஆளுநரை திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதேபோல் இனிமேல் ஆளுநர் இஷ்டம்போல செலவு செய்யக்கூடாது என நிதி அமைச்சரும் பேசினார். அதையடுத்து அவசர அவசர தனி தீர்மானம் கொண்டு வந்த நாளே, ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்தார்.
இந்த சூழலில் தமிழகத்தை போலவே, ஆளுநர் குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்க தனி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதல்வர்களுக்கு முக ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து முக ஸ்டாலினின் கடிதத்திற்கு வரவேற்பு தெரிவித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் சாசனத்தை காக்க போராடுவோம் என பதில் அளித்தார். அதேபோல் கேரள முதல்வர் பினராய் விஜயனும் முக ஸ்டாலினை பாராட்டினார்.
இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார். இது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ஆளுநர்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கான எதிரான இந்த புதிய தொடக்கத்தை பாராட்டிய முதல்வர் மம்தா பானர்ஜி, தனது முழு ஒப்புதலை வழங்குவதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சி தலைவர்கள் ஒன்று கூடி முடிவு எடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.