தமிழக பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதில் இருந்து தப்பிக்கவே தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திமுக ஆட்சியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறோம். பட்டியல் சமூக மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்கியிருந்த ரூ.10,000 கோடி நிதியைச் செலவிடாமல் இருப்பது குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு தமிழக அரசிடம் இருந்து இன்று வரை பதில் இல்லை. ராணிப்பேட்டையில், ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டிடம் கட்டாமல் புறக்கணிக்கும் திமுக ஆட்சி குறித்து நேற்று கேள்வி எழுப்பியிருக்கிறோம்.
திமுக ஆட்சியில், பட்டியல் சமூக மக்களுக்கு எதிரானக் கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பட்டியல் பிரிவினருக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் வழங்கப்படும் சலுகைகளை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, சட்டசபையில் திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக பாஜகவினர், திமுகவினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிப்பதில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்தும் உத்தியாகத்தான் இது தெரிகிறது.
மத்திய அரசு ஆணையம் அமைத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அதே நோக்கத்துக்காக ஒரு கண்துடைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது யாரை ஏமாற்ற? எந்த தரவுகளின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்பதை முதல்வர் தெளிவுபடுத்துவரா? திமுகவினரால் பட்டியல் சமூக மக்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி என்று கேட்டுக்கொள்கிறோம்.
துபாயில் இருந்து, முதல்வர் மகனுக்கும் மற்ற முக்கிய திமுக கட்சியினருக்கும் நேரடித் தொடர்புள்ள நிறுவனமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட ரூ.1000 கோடி முதலீடு குறித்த எங்கள் கேள்விக்கு, முதல்வர் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.