60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பிரிவினை அரசியலை செய்தது: ஜே.பி.நட்டா

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பிரிவினை அரசியலை செய்து வந்ததாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று கர்நாடகம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் கட்சி நிா்வாகிகள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது ஜே.பி.நட்டா பேசியதாவது:-

கர்நாடக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் நிற்கவில்லை. நாட்டில் 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் பிரிவினை அரசியலை தான் செய்தது. சமுதாயத்தை இரண்டாக உடைத்த அக்கட்சி இன்று பலவீனம் அடைந்துள்ளது. பா.ஜனதா மண்டல ரீதியிலான அடையாளங்களை கவுரவிக்கிறது. பிரதமர் மோடியின் துடிப்பான தலைமையின் கீழ் நாடு வலுவாக உள்ளது. இந்திய அரசியல் கலாசாரத்தை மோடி மாற்றியுள்ளார். மத்திய பணிக்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி நாட்டின் 13 மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மோடி பிரதமரான பிறகு பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. அண்டை நாடுகளில் அவசர நேரங்களில் தேவையான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது.

முன்பு இந்தியா, பாகிஸ்தான் பெயர்கள் குறித்து விவாதம் நடந்தது. தற்போது இந்தியாவின் பெயர் பேசப்படும்போது, பாகிஸ்தான் பெயர் வருவது இல்லை. இதை எல்லாம் மோடி மாற்றி அமைத்துள்ளார். ஜி20 நாடுகளின் சபைக்கு அனைவரையும் இந்தியா வரவேற்கிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அங்கிருந்த 23 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக தாய் நாட்டிற்கு அழைத்து வந்தோம். இதற்கு பிரதமர் மோடி காரணம். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.