சீனாவுடனான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார்.
லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு சீன-இந்திய வீரர்களுக்கு இடையே நடந்த மோதலுக்குப்பின், கடந்த 3 ஆண்டுகளாக அங்கு சுமுக நிலை திரும்பவில்லை. அங்கு சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து ராணுவத்தை விலக்க சீனா மறுப்பதால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. எனவே சீனாவுடனான எல்லையை மிகவும் விழிப்புடன் கண்காணிக்குமாறு ராணுவத்துக்கு, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் நடந்து வரும் ராணுவ தளபதிகளுக்கான மாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:-
நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் சீன ராணுவம் படைகளை குவித்துள்ளதால் பதற்றமான சூழல் உள்ளது. அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோட்டின் பாதுகாப்பை பராமரிக்க நமது ஆயுதப்படைகள், குறிப்பாக ராணுவம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பே அரசின் உச்சபட்ச முன்னுரிமை ஆகும். எல்லையில் பணிபுரியும் ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் சிறந்த ஆயுதங்கள் மற்றும் வசதிகளை வழங்குவதே அரசின் நோக்கம் என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.
உலகெங்கிலும் உள்ள புவிசார் அரசியல் மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்ப தங்கள் திட்டமிடல் மற்றும் உத்திகளை ஆயுதப்படைகள் வடிவமைக்க வேண்டும். காஷ்மீரில் பயங்கராத நடவடிக்கைகள் கணிசமாக குறைந்துள்ளன. இதனால் அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட்டு உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கூட ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உள்நாட்டு பதுகாப்பில் அதிகமான முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், அமைதிக்கான அரசின் முயற்சிகளுக்கு சவால் விடும் தேச விரோத அமைப்புகளுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மாறிவரும் இந்த காலகட்டத்தில் அச்சுறுத்தல் மற்றும் ஆயுதங்களின் போக்கு மிகவும் மாறி வருகின்றன. அதற்கேற்ப நமது தற்காப்புக்கு தயாராகிக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
நிகழ்நேர நுண்ணறிவை மிகவும் திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நாம் முழுமையாக தயாராக முடியும். ஒவ்வொரு ராணுவ வீரர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நலன் மற்றும் நல்வாழ்வு அரசின் முக்கிய குறிக்கோளாகும். ஆயுதப்படைகள் மட்டுமின்றி அவர்களது குடும்பங்களின் நலன்களையும் உறுதி செய்யவும் அரசு உறுதிபூண்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்புக்காக ஆயுதப் படைகள் பாடுபடுவதைப் போன்று ஆயுதப் படைகளுக்காக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.
டெல்லியில் கடந்த 17-ந்தேதி முதல் 5 நாட்கள் நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாட்டில் தேசபாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லையில் படைகளின் தயார்நிலையை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. மாநாட்டு முடிவில் ராணுவத்துக்கான முக்கியமான கொள்கை முடிவுகள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.