2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது நரோதா பாட்டியாவில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 68 பேரை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து இருக்கிறது.
கடந்த 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி முதல்முறையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார். அடுத்த 5 மாதங்களில் 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்தனர் என்றும், தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் தெரிவித்தது.
ஆனால், ரயில் எரிப்புக்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி குஜராத் முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கண் முன்னே கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 2 வாரங்கள் தொடர்ந்த இந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. குஜராத் கலவரத்தால் 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அரசு வெளியிட்ட தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கலவரத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் 2,000க்கும் மேற்பட்டோர் இதில் கொல்லப்பட்டதாக தெரிவித்து உள்ளனர்
மாநிலம் முழுவதும் வெடித்த இந்த கலவரத்தில் ஆங்காங்கே உள்ளத்தை உறைய வைக்கும் கொடூரங்கள் அரங்கேறின. அதில் ஒன்றுதான் நரோதா பாட்டியா படுகொலைகள். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அங்கிருந்த வீடுகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதில் அதில் இருந்த 11 பேர் உடல் கருகி துடிதுடித்து இறந்தனர். இந்த வழக்கில், பாஜக அமைச்சராக இருந்த மாயா கோட்னானி 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய உள்துறை அமைச்சர் மாயா கோட்னானி அரசு தரப்பு சாட்சியாக ஆஜரானார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அகமதாபாத் நீதிமன்றம் வெளியிட்டது. அதில் மாயா கோட்னானி, பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 68 பேரை விடுதலை செய்வதாக அறிவித்து உள்ளது.