தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார்.
2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மார்ச் 23ஆம் தேதி பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெறும் என்றும், பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் மார்ச் 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மார்ச் 28 ஆம் தேதி முதல் பல்வேறு துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி ஒவ்வொரு துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்தி வைத்தார். 17 சட்ட மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.