சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி விளையாட்டுத் திடலில் தி.மு.க. சார்பில் 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வுக்கும், இஸ்லாமியர்களுக்குமான உறவு என்பது வரலாற்று உறவு. அதுவும் இஸ்லாமியச் சகோதரர்கள் மீது கருணாநிதி எந்தளவுக்கு அளவற்ற அன்பை வைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும். தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் உருது பேசக்கூடிய முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, 2007-ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது என இஸ்லாமியருக்கான தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே போக முடியும். சிறுபான்மை நலன் காப்பதை ஆட்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உறுதி எடுத்துக்கொண்டு நடந்து வருகிறோம். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.
சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு இயற்கை மரணத்துக்கான உதவித்தொகையை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்கியிருக்கிறோம். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை ரூ.1,000 கல்வி உதவித் தொகை, சென்னை, கோவை மாவட்டங்களில் 2 சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகள், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினர் நல கல்லூரி மாணவியர் விடுதிக்கு சொந்தக் கட்டிடம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.