டெல்லியில் அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல்காந்தி!

அவதூறு வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், அரசு பங்களாவை காலி செய்தார்.

மோடி எனும் ஜாதியினரை அவதூறாக பேசிய வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி, ராகுல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகி உள்ளது. இதனால், எம்.பி., பதவியை தக்க வைக்க அவர் குஜராத் உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டிய நிலையில் உள்ளார்.

ராகுல் எம்.பி., பதவி வகித்த போது, டெல்லியில் 12, துக்ளக் லேன் என்ற முகவரி கொண்ட பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த பங்களாவில் ராகுல் 2005 ஏப்., 22 முதல் வசித்து வந்தார். எம்.பி., பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரசு பங்களாவை காலி செய்ய பார்லிமென்ட் வீட்டுவசதி வாரிய குழு உத்தரவிட்டது. அரசியல் சட்டப்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி., அரசு பங்களாவில் குடியிருக்க முடியாது. ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும். பங்களாவை காலி செய்ய ராகுலும் ஒப்பு கொண்டார். அவருக்காக மாற்று ஏற்பாடுகள் செய்ய காங்கிரசார் தீவிரம் காட்டி வந்த நிலையில், ஜன்பத் சாலையில் வசிக்கும், தாயார் சோனியாவுடன் சேர்ந்த தங்க உள்ளதாக ராகுல் அலுவலகம் அறிவித்தது.

இந்நிலையில், அரசு பங்களாவை காலி செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து அரசு பங்களாவை ராகுல் காலி செய்தார். இன்று, சகோதரி பிரியங்காவுடன் அங்கு வந்து வீட்டை பார்வையிட்டார். கடந்த வாரம் முதல், பொருட்களை அங்கிருந்து எடுத்து செல்லும் பணிகள் எடுத்து வந்தது.