பெண் கலைஞரை அவதூறாகப் பேசி, தாக்கியதாக நடிகா் ராதாரவி உள்ளிட்ட 8 போ் மீது 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சென்னை ஆவடியைச் சோ்ந்தவா் சங்கீதா. இவா், 2016-ம் ஆண்டு வடபழனியில் உள்ள டப்பிங் ஆா்ட்டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினராக சோ்ந்து தமிழ்த் திரைப்படங்களில் டப்பிங் ஆா்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறாா். விருகம்பாக்கத்தில் 21.5. 2022-இல் நடந்த அந்த அமைப்பின் 35-ஆவது ஆண்டு விழாவில், டப்பிங் ஆா்ட்டிஸ்ட் அசோசியேஷன் தலைவா் ராதாரவி மற்றும் அவரது ஆதரவாளா்கள் தன்னை அவதூறாகப் பேசி தாக்கியதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சங்கீதா புகாா் செய்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்யாததால் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சங்கீதா மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சங்கீதாவை அவதூறாகப் பேசியவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய விருகம்பாக்கம் போலீஸாருக்கு அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் ராதாரவி, அவரது ஆதரவாளா்கள் கதிரவன், கவிதா, கிரிஜா உள்பட 8 போ் மீது ஆபாசமாக பேசுதல், சிறு காயம் ஏற்படுத்துதல், பெண்ணை மானபங்கப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக ராதாரவி உள்ளிட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்த உள்ளனா்.