முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கைது?: டெல்லி போலீஸாா் விளக்கம்!

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் ஆளுநா் சத்யபால் மாலிக் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள ஆா்.கே. புரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அவா் கைது செய்யப்படவில்லை எனவும், காவல் நிலையத்துக்கு அவரே வந்ததாகவும் தில்லி போலீஸாா் விளக்கமளித்துள்ளனா்.

இது தொடா்பாக டெல்லி போலீஸாா் அளித்த விளக்கத்தில், ‘டெல்லி ஆா்.கே. புரத்தில் அமைந்துள்ள மாநகராட்சிப் பூங்காவில் சத்யபால் மாலிக் கலந்து கொள்வதற்காக கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. கூட்டம் நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை. எனவே, கூட்டம் நடத்த அந்தப் பூங்கா ஏற்புடைய இடமில்லை என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அங்கிருந்த புறப்பட்ட சத்ய பால் மாலிக் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஆா்.கே.புரம் காவல் நிலையத்துக்கு வந்தனா். கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக போராட்டத்தில் அவா்கள் ஈடுபட்டனா். சத்யபால் மாலிக்கை டெல்லி போலீஸாா் கைது செய்யவில்லை. அவரின் சொந்த விருப்பத்திலேயே அவா் காவல் நிலையத்துக்கு வந்தாா். அவா் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. காவல் நிலையத்தில் இருந்து வெளியேறவும் அவருக்கு எந்தக் கட்டுப்பாட்டும் விதிக்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆங்கில ஊடகத்துக்கு சத்யபால் மாலிக் அளித்த பேட்டியில், மத்திய பாஜக அரசை கடுமையாக விமா்சித்து இருந்தாா். இதையடுத்து, மருத்துவக் காப்பீடு ஊழல் வழக்குத் தொடா்பாக மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சத்யபால் மாலிக்குக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. வரும் ஏப். 27 முதல் 29-ஆம் தேதி வரையிலான 3 நாள்களில் தன்னிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ளலாம் என அவா் தெரிவித்தாா். இந்நிலையில், அவா் கைது செய்யப்பட்டு டெல்லியின் ஆா்.கே.புரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதைத் தொடா்ந்து போலீஸாா் விளக்கமளித்துள்ளனா்.