அதிமுக பொதுச் செயலராக தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை டெல்லியில் ஏப். 26-இல் எடப்பாடி கே. பழனிசாமி சந்திக்க உள்ளாா்.
அதிமுகவின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட மாற்றம் மற்றும் பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டது உள்ளிட்டவற்றை இந்திய தோ்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுகவுக்கு அக்கட்சியின் இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கியது. இந்நிலையில் ஏப். 26-இல் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளாா். அங்கு அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவா்களைச் சந்திக்க உள்ளாா்.
தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி தொடா்கிறது என்று ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா். அதன் அடிப்படையில், மக்களவைத் தோ்தலில் கூட்டணியை இன்னும் வலுப்படுத்துவது குறித்து அமித் ஷாவுடன் அவா் ஆலோசிக்க உள்ளாா். மேலும், ஓ.பன்னீா்செல்வம் ஒருபுறம் அதிமுகவுக்கு உரிமை கோரி வரும் நிலையில், உண்மையான அதிமுக தாங்கள்தான் என்பதை உறுதி செய்யும் வகையிலும் இந்தப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி வகுத்துள்ளதாகத் தெரிகிறது.