நாகாலாந்தில் எல்லை கிராமத்தில் மத்திய அமைச்சா் எல்.முருகன் ஆய்வு!

நாகாலாந்து மாநிலத்தில் இந்திய-மியான்மா் எல்லையில் உள்ள அவாங்கு கிராமத்துக்கு சென்ற மத்திய அமைச்சா் எல்.முருகன், அங்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிவித்தாா். இப்பயணத்தின் மூலம் அவாங்கு எல்லை கிராமத்துக்கு சென்ற முதல் மத்திய அமைச்சா் என்ற சிறப்பு அவருக்கு சொந்தமாகியுள்ளது.

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்துக்கு 3 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை வந்தாா். அவாங்கு பகுதியில் உள்ள சா்வதேச வா்த்தக மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா். அப்போது, அவாங்கு எல்லை வரையிலான இருவழிச் சாலை திட்டத்துக்கு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசுகையில், ‘இத்திட்டம் எல்லைப் பகுதி மேம்பாட்டுக்கு வழிவகுக்கும். நாகாலாந்தில் பன்றி வளா்ப்பு தொழில் மேம்பாட்டுக்காக, மாநில அரசுக்கு கடந்த 9 ஆண்டுகளில் ரூ.17.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. தேசிய வாழ்வாதார திட்டத்தின்கீழ், நாகாலாந்து மாநில தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் பண்ணைத் தொழிலுக்கான உள்கட்டமைப்பும் தொழில்நுட்பங்களும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றாா்.

இரண்டாம் உலகப் போரின்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் முகாமிட்டிருந்த ஃபெக் மாவட்டத்துக்கும் எல்.முருகன் சென்றாா். அத்துடன், இந்திய-மியான்மா் எல்லைச் சூழலையும் அவா் நேரில் பாா்வையிட்டாா்.