இந்தியாவை காப்பாற்ற தி.மு.க.வினர் தயாராக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் நல்லசேதுபதி இல்லத் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். விழாவில் அவர் பேசியதாவது:-

தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற ஜூன் 3-ந் தேதி தொடங்குகிறது. நூற்றாண்டு விழாவையொட்டி கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஒரு இலக்கு வைத்துள்ளோம். என்னவென்றால் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, அதையும் தாண்டி 2024-ல் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலையொட்டி ஆங்காங்கே ‘பூத்’ கமிட்டியை அமைப்பது என்ற இலக்கு வைத்துள்ளோம். இந்த பணியை தீவிரப்படுத்த வேண்டும். இந்த இலக்கை நாம் நிறைவேற்றினால்தான் இந்த நாட்டை நாம் காப்பாற்ற முடியும். அதை மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டை பொறுத்த வரை 2 ஆண்டு காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி தி.மு.க. ஆட்சி என்று நான் சொல்வதில்லை. நம்முடைய ஆட்சி என்று தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

சட்டமன்றத்தில் கூட பட்ஜெட் விளக்க கூட்டத் தொடரின் நிறைவுநாளில் நான் பேசுகிறபோது குறிப்பிட்டு சொன்னேன். ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு காலத்தில் என்னென பணிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மூன்றாம் ஆண்டை தொடங்க இருக்கிறோம். ஆகவே தேர்தல் நேரத்தில் அளித்த அத்தனை உறுதிமொழியையும் எந்த அளவுக்கு தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நிதிநிலை பற்றாக்குறையாக இருந்தாலும், ஒன்றிய அரசு நமக்கு தேவையான அளவுக்கு துணை நிற்காவிட்டாலும் அதை எல்லாம் தாண்டி இந்தியாவிலேயே ஒரு சிறந்த மாநிலமாக நம்பர்-1 முதலமைச்சர் என்ற பெயரை பெற்றிருக்க கூடிய ஒரு மாநிலமாக இன்று வளர்ந்து கொண்டிருக்கிறோம். ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் என்பதுதான். அதே போல பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1000 மாதம் வழங்கப்படும். அது இன்றைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

குடும்பத் தலைவி உரிமைத்தொகையாக 1000 ரூபாய் மாதம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதையும் ஆட்சிக்கு வந்த உடனே நிறைவேற்ற வேண்டும் என்றுதான் முடிவு செய்தோம். ஆனால் இருந்த நிதிநிலை சூழ்நிலை, அதையெல்லாம் இன்றைக்கு ஓரளவுக்கு சரி செய்து அதற்கு பிறகு இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்து உள்ளோம். அதன்படி அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதியன்று அந்த உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இப்படி பெண்களின் முன்னேற்றத்துக்கு பல திட்டங்களை தீட்டினாலும், அதேநேரத்தில் மாநில உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்க கூடாது. மாநில உரிமைக்கு போராட வேண்டும் என்ற நிலையில் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம்.

2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் நாம் வெற்றி பெற்றால் தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு நீங்கள் என்றைக்கும் துணை நிற்க வேண்டும். இந்தியாவை காப்பாற்றுவதற்கு நீங்கள் இப்போதே தயாராக இருக்க வேண்டும். உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 2024-ல் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை நம் அணிக்கு ஏற்படுத்தி தருவதற்கு நீங்கள் துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.