தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய தொலைநோக்குடன் கூடிய தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் காற்று மாசு மற்றும் வெப்பமயமாதல் செயல்பாடுகளை குறைப்பதற்காக பசுமை இந்தியா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி இருக்கையில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்த காற்று மாசு மற்றும் வெப்பநிலை ஆகியவை தொடர்ந்து அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவும் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று என்பதால் இந்த பாதிப்புகளை கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இந்தியா இருக்கிறது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பசுமை இந்தியா திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அழிந்து வரும் காடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே பிரதான நோக்கமாகும். இந்த திட்டத்தின்படி ஆண்டு தோறும் குறிப்பிட்ட நாளில் ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் மரக்கன்றுகள் நடப்படும். இவை அடுத்த ஆண்டு மீண்டும் கணக்கெடுக்கப்படும். நட்டு வைக்கப்பட்ட மரங்களில் எத்தனை மரங்கள் வளர்ந்துள்ளன? எத்தனை மரங்கள் அழிந்தள்ளன என்பதை கணக்கெடுத்து பார்த்து மீண்டும் மரக்கன்றுகள் நடப்படும். அப்படியாக கடந்த 2022ம் ஆண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

நேற்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் மரங்கள் குறித்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்காக பிரதமர் மோடி தமிழில் டுவீட் செய்துள்ளார். அதில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான மற்றும் தொலைநோக்குடன் கூடிய முயற்சிக்கு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். இந்த டுவீட் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.