பிரதமர் மோடிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

கேரளா செல்லும் பிரதமர் மோடியை கொல்வதாக மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்து பெரும் அதிர்ச்சியது. இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் மிரட்டல் விடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா செல்கிறார். இன்றும், நாளையும் பிரதமர் மோடி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி முறையாக நடக்க தேவையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் சென்றது. அந்த கடிதம் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்தது. அதில் கேரளா வரும் பிரதமர் நரேந்திர மோடி ராஜீவ் காந்தியை போன்ற நிலையை சந்திப்பார் எனக்கூறி மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த சுரேந்திரன் உடனடியாக கடிதத்தை போலீசிடம் வழங்கி புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வந்தனர். கொச்சியை சேர்ந்த என்கே ஜானி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தான் மிரட்டல் விடுக்கவில்லை எனவும், தன்மீதான காழ்ப்புணர்ச்சியில் மற்வறர்கள் அவரது பெயரில் மிரட்டல் விடுத்து இருக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் சில பெயர்களை அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து என்கே ஜானியை போலீசார் விட்டுவிட்டு அவர் கூறிய நபர்களை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தான் பிரதமர் மோடிக்கு மனித வெடிகுண்டு மூலம் மிரட்டல் விடுத்ததாக கொச்சியை சேர்ந்த சேவியர் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனை கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் உறுதி செய்துள்ளார். இதுபற்றி சேதுராமன் கூறுகையில், ‛‛பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்துள்ளோம். அவரது பெயர் சேவியர். இவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மிரட்டல் கடிதத்தின் பின்னணி என்பது இருநபர்களுக்கு இடையேயான தனிப்பட்ட பிரச்சனை தான் காரணமாக உள்ளது. அதாவது பக்கத்துக்கு வீட்டுக்காரரை போலீசில் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு எதிராக மிரட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் தடயவியல் துறையின் உதவியுடன் அந்த நபரை கைது செய்துள்ளோம்” என்றார்.

அதாவது கைது செய்யப்பட்ட சேவியருக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் தான் பக்கத்து வீட்டுக்காரரை சிக்கவைக்கும் நோக்கத்தில் அவரது முகவரியில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பது தெரியவந்தது. கைதான சேவியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பற்றிய அனைத்து விபரங்களையும் போலீசார் கேட்டறிந்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று பிரதமர் நரேந்திர மோடி கேரளா செல்ல உள்ளதால் அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் சேதுராமன் கூறுகையில், ‛‛பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கொச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2,060 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பேரணியில் 15 ஆயிரம் பேரும், யுவம் -23 நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.