உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார். புதிய வழக்குகளை மே மாதத்திற்கு பட்டியலிடுவதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 10 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வந்தது. நேற்று முன் தினம் இந்தியாவில் 12,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், நேற்று கொரோனா பரவல் குறைந்தது. நேற்று இந்தியாவில் 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 7,178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தகவல் தெரிவித்துள்ளார். சஞ்ஜீவ் கண்ணா, ரவீந்தர்பட், ஜே.பி.பர்திவாலா, அனிருத்தா போஸ், மனோஜ் மிஸ்ரா ஆகிய 5 நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.