ராகுல் நேரில் ஆஜராக உத்தரவிட்ட கோர்ட் சம்மனுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் தடை!

மோடி பெயர் குறித்த விமர்சனத்துக்காக நேரில் ஆஜராக உத்தரவிட்ட பாட்னா கீழ்நீதிமன்ற சம்மனுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி பேசுகையில், மோடி பெயர் குறித்து விமர்சித்தார். இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கு திடீரென விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இவ்வழக்கில் கடந்த மார்ச் 23-ந் தேதி, ராகுல் காந்தி குற்றவாளி; அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாக சூரத் கீழ் நீதிமன்றம் அறிவித்தது. மக்கள் பிரதிநிதியாக ராகுல் காந்தி இருந்ததால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மறுநாளே அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் காந்தி ஜெயித்த வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் ராகுல் காந்திக்கு மத்திய அரசு ஒதுக்கிய டெல்லி பங்களாவை காலி செய்யவும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு எதிரான இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. பாஜக அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்தை முடக்கின. இதனிடையே ஏப்ரல் 3-ந் தேதியன்று சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இதனிடையே மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தில் பீகார் மாநிலம் பாட்னா கீழ் நீதிமன்றத்திலும் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ராகுல் காந்தி ஏப்ரல் 12-ந் தேதி ஆஜராக பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் ஏப்ரல் 12-ல் ராகுல் பாட்னா கோர்ட்டில் ஆஜராகவில்லை. இவ்வழக்கில் நேரில் ஆஜராக ராகுல் தரப்பு அவகாசம் கோரியது. இதனால் ஏப்ரல் 25-ந் தேதி ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என பாட்னா கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரத்தில் பாட்னா கீழ் நீதிமன்றத்தின் இந்த சம்மனுக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம், கீழ் நீதிமன்றத்தின் சம்மனுக்கு மே 15-ந் தேதி வரை தடை விதித்தது.