மதுபானங்களை வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்துவிடுங்கள்: வானதி சீனிவாசன்!

திமுக அரசு மது குறித்துக் கொண்டு வந்த அரசாணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன், இந்த விவகாரத்தில் திமுக அரசை மிகக் கடுமையாகச் சாடினார்.

தமிழ்நாடு அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனிடையே தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதன்படி திருமண மண்டபங்களில் மது விநியோகத்துக்கு அனுமதி தரப்படவில்லை என்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார். இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் கடுமையாகச் சாடி வருகின்றனர். அதன்படி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.

கோவை தெற்கு பகுதியில் சாய்பாபா காலனியில் அமைந்துள்ள பூங்காவை சீர்செய்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை தெற்கு எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன் கூறியதாவது:-

எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் நான் அங்கன்வாடி மையங்களுக்கு அதிகம் முன்னுரிமை அளித்து வருகிறேன். நகர்ப்புறங்களில் அங்கன்வாடி மையங்கள் கட்ட இடமே இல்லை. பூங்காக்கள் கட்டவும் இடமில்லை. இதனால் தமிழக அரசு நகர்ப்புறங்களில் கட்டிடங்களுக்குப் பதில் பூங்காக்களைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக அரசு தேர்தல் அறிக்கையிலேயே டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று கூறியிருந்தார்கள். ஆனால், இப்போது என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள். திருமண மண்டபங்கள், வீடுகளில் பார்ட்டி நடக்கும் போது, அங்கே கூட மது குடிக்கலாம் என்று விதி கொண்டு வந்துள்ளனர். இதெல்லாம் எங்குச் சென்று முடியுமோ தெரியவில்லை. மக்களிடம் ஒரு பக்கம் மதுவை டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைப்போம் எனச் சொல்லிவிட்டு மறுபக்கம் இப்படிச் செய்து வருகிறார்கள். இதற்குப் பதிலாக அவர்கள் மதுபானங்களை டோர் டெலிவரியே செய்துவிட்டுப் போகலாம்.

இதெல்லாம் ஏமாற்று விஷயம்.. திருமண மண்டபங்களில் மது குடிக்க அனுமதி அளித்துள்ளது என்பது மது குடிப்பதை அரசு ஊக்குவிப்பது போல ஆகும். இவை எல்லாம் மிக மோசமான சீரழிவை நோக்கியே தள்ளுகிறது. இது விதிவிலக்கோ.. சட்டத் திருத்தமோ இதை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இதை என்ன ஆனாலும் அனுமதிக்கக்கூடாது. இப்போது கூட என்ன செய்கிறார்கள் எனப் பாருங்கள். ஒரு இடத்தில் மதுக்கடைகளை அமைக்க எதிர்ப்பு வந்தால், அங்கே மூடுவது போல மூடிவிட்டு 5 கிமீ தூரத்தில் மதுக்கடையைத் திறக்கிறார்கள். மது கொள்கையில் நேரடியாகச் செய்ய முடியாத விஷயங்களை இவர்கள் மறைமுகமாகச் செய்கிறார்கள். இதை அவர்கள் உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும். மது என்பதை மக்களை அடிமையாக்கும். எனவே, அரசு இதில் மெத்தனம் காட்டக் கூடாது.

அமைச்சர் பிடிஆர் ஆடியோ குறித்து ஆளுநரை பாஜகவினர் சந்தித்துள்ளனர். இந்த விவாகரத்தில் ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். பொது வாழ்க்கையில் இருப்போர் தங்கள் மீது வரும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க வேண்டும். ஆடியோ விவகாரத்தில் மாநில அரசே நிரூபிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. வரி ஏய்ப்பு செய்திருப்பார்கள் என்று சந்தேகம் எழும் நிறுவனங்கள் மீது தான் சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்கள் மீதே சோதனை என்றெல்லாம் இல்லை. தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி எய்ப்பு செய்துள்ளதாகச் சோதனை நடத்தப்படுகிறது. ஒவ்வொன்றுக்கும் உள்நோக்கம் என்ன எனப் பார்க்க முடியுமா.. அரசியல் கட்சியினர் நடத்தும் நிறுவனங்கள் மீது சோதனை நடத்தவே கூடாதா. இவ்வாறு அவர் கூறினார்.