சனாதனமே ஜாதியை தமிழரிடம் விதைத்தது: மு.க.ஸ்டாலின்

அறம் சார்ந்த தமிழ் சமுதாயத்திற்குள் சனாதனம் புகுந்து சாதிய ஏற்றத்தாழ்வையும், பொருளாதார ஏற்றத்தாழ்வையும் உருவாக்கியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு 100-வது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது:-

நமது மொழியின் சிறப்பை, நமக்காக உழைத்த தலைவர்களை, நமது நாட்டின் வளத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவர் தனது பயணத்தை, எங்கிருந்து தொடங்கினார். எதற்காகத் தொடங்கினார் என்பதை நினைவில் வைத்திருந்தால்தான், அவரது பயணத்தின் இலக்கை அடைய முடியும்! இல்லையென்றால் அவர் இலக்கை மறந்து வழிதவறிவிடுவார்! இது ஒரு இனத்தின் பயணம்! நம் தமிழினத்தின் பயணம்! நமது வரலாறு என்பது, நமது இலக்கை தலைமுறைகளைக் கடந்தும் நினைவுபடுத்துவது! அதற்காகத்தான் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அரங்கத்தின் மேடையில், பதாகைகளில் வள்ளுவர் நிறைந்திருந்தார். ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்பது வள்ளுவர் வகுத்ததுதான். ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற கனவு அது. அதுவே சமூகநீதி. எல்லா நிலையிலும் சாத்தியப்படுத்துவதற்கு நாம் ஓயாது அதை உழைத்துக்கொண்டிருக்கிறோம். தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா தமிழினத் தலைவர் கலைஞர் – என அனைவரிலும் வள்ளுவரை நீங்கள் பார்க்கலாம்! வள்ளுவர் சொன்ன சமத்துவத்தை நோக்கியே திராவிட இயக்கம் உழைக்கிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்பதுதான் தமிழரின் அறநெறி! சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறி முறையின் – மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி” – என்பதுதான் தமிழரின் அறநெறி! சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே, கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே! – என்பதுதான் தமிழரின் அறநெறி!

சங்க காலத் தமிழர் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கை! இடைக்காலத்தில் புகுந்த சனாதனம், இந்த அறத்தைக் கொன்றது. சமய நம்பிக்கைகளுக்குள் சனாதனம் நுழைந்ததும் உழைப்புக்குள் நிலவுடைமை நுழைந்ததும்தான் தமிழ்ச் சமுதாயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வையும் பொருளாதார ஏற்றத் தாழ்வையும் விதைத்தது. இதனை எதிர்கொள்வதற்கான போராட்டம்தான் காலம் காலமாக நடந்து வருகிறது. திருவள்ளுவர் – வள்ளலார் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் தந்தை பெரியார் வரையிலான சமூக சீர்திருத்த தலைவர்களின் வரலாற்றை இன்றைய இளைய தலைமுறை அறிய வேண்டும். எப்படி இருந்த நாம் இப்போது இப்படி வளர்ந்திருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். கோவிலுக்குள் வர முடியாது, சாலைகளில் நடக்க முடியாது, படிக்கக் கூடாது, எதிரே வரக்கூடாது போன்ற தடைகள் எல்லாம் இப்போது இல்லை என்றால், எப்படி இல்லாமல் ஒழிக்கப்பட்டது? அதுதான் நமது சமூகச் சீர்திருத்தத் தலைவர்களுடைய வெற்றி!

தோள் சீலைப் போராட்டத்துக்கு 200-ஆவது ஆண்டு விழா. வைக்கம் போராட்டத்துக்கு இது நூற்றாண்டு விழா ஆண்டு! இந்த வரலாறுகளைப் படியுங்கள்! ஒருகாலத்தில் சமூக வாசல் அடைக்கப்பட்டுக் கிடந்தது. அதனை நீதிக்கட்சி ஆட்சி திறந்து விட்டது. பள்ளிக்கூடங்கள் மூடி இருந்தது. பெருந்தலைவர் காமராசர் திறந்து வைத்தார். கல்லூரி வாசல்களை பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் திறந்து விட்டார்கள். நம்முடைய அரசு உயர்கல்வியை உருவாக்கித் தரும் அரசு. அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து விதமான தகுதிகளையும் உருவாக்கித் தரும் அரசு. நான் முதலமைச்சராக இருந்து மட்டுமல்ல, ஒரு தந்தையாக இருந்து திட்டங்களைத் தீட்டித் தருகிறேன். தமிழ்நாட்டில் ஒரு கல்விப் புரட்சியே நடந்து கொண்டு இருக்கிறது. பள்ளிக் கல்வியாக இருந்தாலும், கல்லூரிக் கல்வியாக இருந்தாலும், பல்கலைக் கல்வியாக இருந்தாலும், அது உங்களை கல்வித்தகுதி பெற்றவர்களாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.