தன்னை பற்றி அவதூறு பரப்பும் வகையில் தன்னுடைய சொத்துப்பட்டியலை வெளியிட்ட அண்ணாமலையிடம் ரூ.100 இழப்பீடு கேட்டு திமுக பொருளாளர் டிஆர் பாலு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இழப்பீடு தர முடியாது என அவர் வழக்கறிஞர் மூலம் பதில் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொத்துப் பட்டியலை வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் தயாராகி வருவதாகவும் விரைவில் அதை வெளியிடுவோம் என்றும் பல மாதங்களாக பேசி வந்த அண்ணாமலை ஒரு பிரசெண்டேசனை வெளியிட்டார். அது ஊழல் பட்டியல் இல்லை என்றும் அண்ணாமலை திமுகவினரின் சொத்துப் பட்டியலையே வெளியிட்டு உள்ளார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. அண்ணாமலை வெளியிட்ட இந்த பட்டியல் வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பல்வேறு தவறான தகவல் இருப்பதாக கூறி விமர்சனங்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், டிஆர் பாலு ஆகியோரும் அண்ணாமலையிடம் இழப்பீடு கேட்டு அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திமுகவின் வக்கீல் நோட்டீசுக்கு பதில் அனுப்பிய அண்ணாமலை, மன்னிக்கு கேட்கவும், இழப்பீடு தரவும் முடியாது என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்று டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை வழக்கறிஞர் மூலம் பதில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், அண்ணாமலை தன்னுடைய கருத்தில் உறுதியாக உள்ளதாகவும், அவர் மன்னிப்பு கேட்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் டிஆர் பாலு கேட்ட ரூ.100 கோடி இழப்பீட்டையும் தரப்போவதில்லை என அண்ணாமலை சார்பாக அவரது வழக்கறிஞர் பதில் அனுப்பி உள்ளார்.