கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

கேரளாவில் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை இயக்கப்படும்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் என்ஜினானது தனியாக இல்லாமல் ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல அதிநவீன வசதிகள் உள்ளன. இவை சென்னையில் உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் சுமார் 14 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்தில் தொடங்கியது. இதன் 15ஆவது சேவையாக திருவனந்தபுரம்- காசர்கோடு வரை இயக்கப்படுகிறது.

இந்த வந்தே பாரத் ரயில்கள் “ரயில் 18” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும். இதில் 14 ஏசி சேர்களும் இரு எக்ஸிகியூட்டிவ் சேர் கோச்சுகளும் உள்ளன. ஏசி சேர் கோச்சுகள் அக்குவா நிறத்திலும் ஏசி எக்ஸிகியூட்டிவ் சேர்கள் பிங்க் நிறத்திலும் குறியிட்டு காட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் இந்தியாவின் 15 ஆவது சூப்பர்ஃபாஸ்ட் ரயிலாகும். இந்த ரயில் கேரளாவின் முதல் நீல நிற மற்றும் வெள்ளை நிறத்தினாலான ரயிலாகும். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 501 கி.மீ. தூரத்தை கடக்கும். இதன் வழியே நிறைய நீர் நிலைகள், தென்னை மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை தாண்டி செல்லும். 501 கி.மீ. தூரத்தை 7.5 மணி நேரத்தில் கடக்கும். திருவனந்தபுரம்- காசர்கோடு இடையே 6 நிறுத்தங்களில் ரயில் நிற்கும். அவை கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரு்சூர், ஷோரனூர் ஜங்ஷன், கோழிக்கோடு, கண்ணனூர், காசர்கோடு ஆகியவை ஆகும்.

திருவனந்தபுரத்திலிருந்து திருச்சூர் செல்ல இந்த ரயில் 4 மணி நேரம் 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இத்தனை வசதிகளை கொண்ட இந்த ரயில் சேவையை வரும் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் அவர் கொச்சி வந்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் வேட்டி சட்டை அங்கவஸ்திரம் அணிந்து வந்த பிரதமர், வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்த ரயிலுக்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த 17ஆம் தேதி நடந்தது. இந்த ரயிலின் எண் 20633 / 20634 ஆகும். 20633 ரயில் எண் காசர்கோடு திருவனந்தபுரம் சென்ட்ரல் வரையும் 20634 எண் கொண்ட ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் முதல் காசர்கோடு வரையும் இயக்கப்படுகிறது. இவை வியாழக்கிழமைகளை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படும். காசர்கோடு வந்தே பாரத் ரயிலானது காசர்கோடில் இருந்து 26 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 22.35 மணிக்கு திருவனந்தபுரத்தை வந்தடையும். அது போல் திருவனந்தபுரத்திலிருந்து 28 ஆம் தேதி காலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில் அன்று மதியம் 13.25 மணிக்கு காசர்கோடை சென்றடையும். இந்த ரயில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை விட சூப்பர் பாஸ்ட் ஆகும். அதாவது ராஜதானி எக்ஸ்பிரஸ் மேற்கண்ட வழித்தடத்தை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் அடைகிறது என்றால் வந்தே பாரத் ரயிலோ 8 மணி நேரம் 5 நிமிடங்களில் அடைகிறது.

இந்த வந்தே பாரத் ரயிலில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை ரூ 1520 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில் ரூ 308 உணவு கட்டணமும் அடங்கும். அது போல் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் ரூ 2815 வசூலிக்கப்படுகிறது. இதில் 369 ரூபாய் உணவு கட்டணமும் அடங்கும். உணவு தேர்வு என்பது இந்த ரயிலில் பயணிகளின் விருப்பம்தான். டிக்கெட் புக் செய்யும் போதே உணவு ஆப்ஷன் வேண்டாம் என தேர்வு செய்துவிட்டால் ரயில் பயண கட்டணத்தில் உணவு கட்டணம் வசூலிக்கப்படாது. அது போல் திருவனந்தபுரம் சென்ட்ரல் டூ காசர்கோடு வரை செல்ல சேர் காரில் உணவு கட்டணம் ரூ 379 சேர்த்து ரூ 1590 கட்டணமாக வசூலிக்கப்படும். அது போல் எக்ஸிகியூட்டிவ் வகுப்பில் உணவு கட்டணம் ரூ 434 சேர்த்து ரூ 2880 பயண கட்டணமாக வசூலிக்கப்படும்.