தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ‘2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்ட’ மசோதாவை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன். யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்ததற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும் பாராட்டு தெரிவித்துள்ளன. இந்த சட்டமசோதாவை எதிர்த்து போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசின் முடிவை ஏற்று போராட்டத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.
கமல்ஹாசன் குறிப்பிட்டது போல் சட்ட மசோதாவை நிறுத்தி வைப்பதோடு நின்றுவிடாமல் நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பலரது கோரிக்கையாக உள்ளது. தொழிலாளர்கள் 12 மணி நேரம் தொடர்ச்சியாக பணி செய்வது என்பது ஏற்புடையது அல்ல. தொழிலாளர்களின் உடல் நிலை, மனநிலையை அது பாதிக்கும். அந்த சட்டம் தொழிலாளர்களுக்கு விரோதமானது என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றன.