2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி அப்பீல்!

சூரத் செசன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும் ராகுல்காந்தி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைதண்டனை வழங்கியது. இதையடுத்து அவரது எம்பி பதவி பறிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சார்பில் சூரத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சூரத் செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 20ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில் ராகுல் மனுவை நிராகரித்தும், சூரத் நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி அகமதாபாத்தில் உள்ள குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராகுல் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருப்பதை காங்கிரஸ் வக்கீல் பிஎம் மங்குகியா உறுதி செய்தார். ராகுல்காந்தி தாக்கல் செய்த அப்பீல் மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.