வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

வருமான வரித்துறை சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருமான வரித்துறையினர் சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக செய்கின்றனர். எங்களுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என முதல்-அமைச்சரும், மற்றவர்களும் தெளிவுப்படுத்தி உள்ளனர். இருந்தாலும் எங்களது எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை என்பது பயமுறுத்தும் செயலாக ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பயப்படமாட்டோம்.

அண்ணா பிறந்தநாளையொட்டி சிறை கைதிகள் 315 பேரை விடுதலை செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் சிலரை விடுதலை செய்வதற்கான கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் சட்டம் இயற்றப்பட்டு விட்டது. இனி சட்டம் தன் கடமையை செய்யும். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் எடுத்த நடவடிக்கைகள் உள்பட சில கோப்புகள் வழக்கு போடுவதற்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டன. அதற்கு கவர்னர் இன்னும் எந்த அனுமதியும் தரவில்லை. அதனால் புதிய வழிகளில் வழக்குகள் போடுவது தொடர்பாக சட்டவல்லுனர்களுடன் கலந்து பேசி வேறு வழியில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.