சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டுவதால், கோவையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படக்கூடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிற சிறுவாணி ஆற்றின் குறுக்கே, சர்வதேசியம் பேசும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, அட்டப்பாடி கூலிகடவு-சித்தூர் சாலையில் நெல்லிபதி என்ற இடத்தில், ஐந்து அடி உயரத்தில் தடுப்பணை கட்டி 90 விழுக்காடு பணிகள் முடிந்திருக்கின்றது. மேலும், இரண்டு தடுப்பணைகளை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தடுப்பணைகளை தடுக்காவிட்டால் கோவை மாவட்டத்திற்கு முழுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
ஏற்கெனவே பவானி ஆற்றிலும் இதுபோல தடுப்பணைகளை கட்டியுள்ளது. கேரள அரசின் நடவடிக்கையால், சிறுவாணி ஆற்றுநீர் உரிமை முற்று முழுதாகக் கானல் நீராகி, மனிதர்கள் குடியிருக்க தகுதியில்லாத நிலையை அடையும். கோவையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படக்கூடிய பேராபத்து ஏற்படும். சிறுவாணி ஆறானது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் வரும் நிலையில் கேரள அரசு, அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது நதிநீர் சட்டத்திற்கு எதிரானது. கேரள அரசு சிறுவாணி ஆற்றின் கொள்ளளவை 50 கன அடியிலிருந்து 45 கன அடியாக ஏற்கனவே குறைத்துள்ளதோடு, கோடைக்காலத்தில் நீர் எடுக்கும் சிறுவாணி ஆற்றின் சுரங்கப்பாதையையும் சிறிதும் மனிதத் தன்மையின்றி மூடியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைகட்டும் கர்நாடக அரசு, பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் ஆந்திர அரசு, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசு. இம்மூன்று மாநிலத்தில் வேறு வேறு கட்சிகள் ஆண்டாலும், அவர்களுக்குள் இருக்கும் ஒரே நிலைப்பாடு, தமிழின விரோதப்போக்கு என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது. இப்போது, இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் விட்டுவிட்டால, நாளை நமது சந்ததிகள் வாழ்வதற்கான பூமியாக தமிழ்நாடு இருக்காது என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இப்போதுவிட்டால், ஒரு காலத்திலும் மீண்டு வர முடியாத மிகப் பெரிய அழிவை தமிழ்நாடு சந்திக்க நேரிடும். எனவே, சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டி கோவையைப் பாலைவனமாக்கும் கேரள அரசின் எதேச்சதிகாரப்போக்கை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.