சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 போலீஸார் பலி!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 11 போலீஸார் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இன்று மதியம் 3 மணியளவில் வேன் ஒன்றில் 10 போலீஸார் அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்களின் வேன் அரன்பூருக்குள் நுழைந்த அடுத்த நொடி, சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் போலீஸ் வேன், பல அடி தூரம் உயரே பறந்து கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்தக் கொடூரத் தாக்குதலில் வேனில் இருந்த 10 போலீஸார் மற்றும் 1 டிரைவர் என 11 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த 10 போலீஸாரும் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து தகவல் தெரியவந்ததும், அங்கு ஏராளமான போலீஸார் மற்றும் சிஆர்பிஎப் படையினர் வந்து இறந்து கிடந்த போலீஸாரின் உடல்களை மீட்டனர். மேலும், அந்தப் பகுதியில் ஆய்வு செய்ததில் ஐஇடி வகை வெடிகுண்டை பயன்படுத்தி இந்த தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தி இருப்பது கண்டறியப்பட்டது. பூமியில் புதைக்கப்பட்டிருந்த அந்த வெடிகுண்டை, சரியாக வேன் அங்கு செல்லும் போது ரிமோட் மூலமாக மாவோயிஸ்டுகள் அதை வெடிக்கச் செய்திருப்பதாக சிஆர்பிஎப் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த தாக்குதலை அரங்கேற்றிய மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை பிடிக்கும் பணியில் சிஆர்பிஎப் படையும், போலீஸாரும் ஈடுபட்டு வருகின்றனர். பஸ்தார் மாவட்ட எல்லைகளில் சீல் வைத்துள்ள போலீஸார், தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெல், இந்த தாக்குதலை நிகழ்த்தியவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில், முதல்வர் பூபேஷ் பாஹெலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலவரத்தை கேட்டறிந்தார். இந்த சூழலில், தாக்குதல் நடத்தப்பட்ட பஸ்தார் மாவட்டத்துக்கு 500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படையினர் விரைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை நடத்துவதற்கு மாவோயிஸ்டுகள் 50 கிலோ எடையுள்ள வெடிகுண்டை பயன்படுத்தி உள்ளனர். இதனால் அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் போலீசார் வந்த வாகனம் 20 அடி தூரத்தற்கு தூக்கி வீசப்பட்டு சின்னாபின்னமாக சிதைந்தது. வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. சாலையோரத்தில் நின்றிருந்த சில மரங்கள் வேருடன் சாய்ந்தன. மாவோயிஸ்டுகளின் இந்த கோழைத்தனமான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, சத்தீஸ்கர் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என உறுதி அளித்தார்.

மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இந்த தாக்குதலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். மேலும் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். “சத்தீஸ்கர் போலீசார் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். அவர்களின் தியாகம் எப்போதும் நினைவுக்கூரப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.