டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்!

டெல்லியில் நேற்று (ஏப்ரல் 26) ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என அமித் ஷா உறுதிபடுத்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்துவிட்டு வந்து, மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் இதே கருத்தை தெரிவித்தார். ஆனால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை மறைமுகமாக சீண்டி வருவது அதிமுக நிர்வாகிகளுக்கு சங்கடத்தை உருவாக்கியது. டெல்லி ஒன்று சொல்ல, அண்ணாமலை வேறொன்று சொல்ல என்று கூட்டணிக் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று அமித் ஷாவை நேரடியாக சந்தித்து சில விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டு வந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோரும் சென்றனர்.

இதையடுத்து நேற்று மாலை டெல்லி வந்த எடப்பாடி பழனிசாமியை, அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் இந்திராகாந்தி விமான நிலையத்தில் வரவேற்றனர். டெல்லி சாணக்கியாபுரியில் இருக்கும் அசோகா ஓட்டலில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சுமார் 9 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் உடன் சென்றிருந்தார். பின்னர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடர வேண்டும், அதே சமயம் அண்ணாமலையின் வரம்பு மீறிய பேச்சைக் கண்டிக்க வேண்டும். ஓபிஎஸ் உடன் பாஜக தலைமை உறவு பாராட்டக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பு அமித் ஷாவிடம் கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் பாஜகவுக்கு 9 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அமித் ஷா கேட்டதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி ஆறு வரை கொடுக்கலாம் என்று கூறியதாகவும் சொல்கிறார்கள். இதனால் பாஜக தரப்பு அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நகர்வுகளிலேயே கூட்டணி தொடருமா, உடையுமா என்பது தெரியவரும்.

அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஆனபிறகு முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட டெல்லி பயணம் இது என்பதால் பல்வேறு யூகங்கள் எழுந்தன. அதிமுக பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக தொடங்கியுள்ளதை இந்த சந்திப்பு உறுதிப்படுத்தி உள்ளது. இதற்கிடையே இன்று மேலும் சில பாஜக மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.